கீழ்ப்பாக்கம், பல நாட்களாக பிரதான சாலையோரத்தில், 24 மணி நேரமும் வழிந்தோடி மழை நீர் வடிகாலில் வீணாக கலக்கும் தண்ணீர், குடிநீரா அல்லது கழிவுநீரா என கேள்வி எழுந்துள்ளது.
அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட கீழ்ப்பாக்கம் பகுதியில், ஆர்ம்ஸ் சாலை உள்ளது. இங்கு கெல்லிசில் இருந்து ஆர்ம்ஸ் சாலை சந்திப்பில், பால்பேர் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் நடைபாதையின் அருகில், 10 அடிக்கு மேல் 'ரோடு கட்டிங்' செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு வெட்டப் பட்டுள்ள பாதையில், கடந்த சில நாட்களாக சுத்தமான தண்ணீர், 24 மணிநேரமும் வழிந்தோடுகிறது. இந்த தண்ணீர், குறிப்பிட்ட துாரத்தில் உள்ள மழைநீர் வடிகாலில் சென்று வீணாக கலக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக பிரதான சாலையோரத்தில், 24 மணி நேரமும் தண்ணீர் வழிந்தோடுகிறது. அவ்வழியாக செல்வோர் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை.
ஆனால், பல நாட்களாக தண்ணீர் வழிந்து, சாலையோர மழை நீர் வடிகாலில் வீணாக கலக்கிறது. இது குடிநீரா அல்லது கழிவுநீரா என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்டத் துறைகளுக்கு புகார் அளித்தும் அலட்சியமாகவே உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.