திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி பகுதி, டாக்டர் நடேசன் சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் குறித்து, அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள டாக்டர் நடேசன் சாலை, போக்குவரத்து நெரிசல் மிகுந்தது.
இந்த சாலையை, நாள்தோறும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வாகனங்களை, சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.
இதனால், இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த சாலையை, அரசுப்பேருந்துகள் கடந்து செல்வது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.
அதேபோல, அவசர ஊர்திகளும், இந்த சாலையை அவ்வளவு எளிதில் கடக்க இயலாது. இந்த பகுதியில், முறையான வாகன நிறுத்தம் வசதி இல்லை. உரிய அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.