வடபழநி, ''கொள்கைகளுக்கு எதிரணியில் நிற்கக் கூடியவர்கள், மறுபடியும் நம் தமிழ் உணர்வை சுயமரியாதை உணர்வை, முன்னுக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்,'' என, வடபழநியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கனிமொழி பேசினார்.
தி.மு.க., சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் மேற்கு பகுதி 130 வது வட்ட தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா, வடபழநி பஜனை கோவில் தெருவில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
தி.நகர் கிழக்கு பகுதி செயலர் மற்றும் தி.நகர் எம்.எல்.ஏ., வுமான ஜெ.கருணாநிதி, எம்.பி., கனிமொழி சென்னை தென்மேற்கு மாவட்ட செயலரும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வுமான வேலு, தி.நகர் மேற்கு பகுதி செயலர் ஏழுமலை ஆகியோர் பங்கேற்றனர்.
சமத்துவ பொங்கல் வைத்ததுடன், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்வில் கனிமொழி பேசியதாவது :
தமிழர்களின் உணர்வோடு கலந்த இனிய விழா பொங்கல் நிகழ்ச்சி. எல்லா மதத்தினரும் எந்த பகுதியினரும் ஒன்று சேர்ந்து தமிழராக நின்று கொண்டாடுவதே சமத்துவ பொங்கல் விழாவின் நோக்கம்.
நம் கொள்கைகளுக்கு எதிரணியில் நிற்கக் கூடியவர்கள், மறுபடியும் நம் தமிழ் உணர்வை சுயமரியாதை உணர்வை முன்னுக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். அதற்கு நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இவர் அவர் பேசினார்.
தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசுகையில், ''கிராமத்தில் நடைபெறும் பொங்கல் போல் நகரிலும் தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருநாளில் நமக்கு உணவளிக்கும், உழவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்,'' என்றார்.