அசோக் நகர்-மருத்துவமனைக்கு, டாக்டர் உடையில் வந்து நோயாளியிடம் நகைகளை திருடி சென்ற பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பெங்களூரு அசோக் நகரில் உள்ள செயின்ட் பிலோமினா மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி சரசம்மா, 50 என்பவர் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினம் மதியம் 2:00 மணியளவில், பெண் ஒருவர், டாக்டர் உடை அணிந்து வார்டுக்குள் வந்தார்.
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி, அனைவரையும் வெளியே செல்லும்படி அறிவுறுத்தினார். சிறிது நேரம் கழித்து அவரும் வெளியே சென்றார்.
அதன்பிறகு நர்ஸ் ஒருவர் வந்தார். அவரிடம் சரசம்மாவின் உறவினர்கள், 'இப்போது வந்து சென்ற டாக்டர் யார்' என கேட்டனர்.
அதற்கு அந்த நர்ஸ், 'இன்னும் டாக்டர் யாரும் வரவில்லையே' என்றார். அதன்பின் தான், வந்தது போலி டாக்டர் என்பது தெரியவந்தது. சரசம்மாவை பார்த்த போது, அவரது கழுத்தில் செயின், விரலில் இருந்த இரண்டு மோதிரங்கள் உட்பட 41 கிராம் தங்க நகைகளை காணவில்லை.
பின், கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த போது, வந்து சென்றது போலி டாக்டர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், அந்த அந்த பெண் பல மருத்துவமனைகளிலும் இதுபோல கைவரிசை காட்டியது தெரியவந்தது. அசோக் நகர் போலீசார், போலி பெண் டாக்டரை தேடி வருகின்றனர்.