குறைந்தது கட்சி ஆதிக்கம்!
யாருமே நுழைய முடியாதபடி இரும்பு கோட்டை, தாய்வீடு என ஒரு கட்சியின் ஆதிக்கமாக பேசப்பட்ட சாம்பியன் பகுதியில் சர்வ சாதாரணமாக சர்வ கட்சியினர் 'பொங்கல் விழா' பெயரில் எலக் ஷன் பிரசாரத்துக்காக காலடி வைத்தனர்.
உசுப்பேத்தி ரணகளமாக்கும் பழைய வெறித்தனம் இல்லாத, கலகலப்பான ஜனநாயக பொங்கல் விழாவை 'யூத் பசங்க' கொண்டாடினாங்க. பழையன போக்கிட்டாங்க. தை பிறந்ததும் சமத்துவ சிந்தனை பிறந்து விட்டது போல தெரிகிறது.
இப்படி பல இடங்களில் அனைத்து தரப்பினரையும் அழைத்து விழா கொண்டாடுகின்றனர். இதுவும் ஒருவகையில் நல்ல கலாச்சாரம் என்று தெரிகிறது. யாரும் யாருக்கும் அடிமையல்லை என்பதை வெளிப்படுத்துறாங்க.
டிபன், மதியம் சாப்பாடு, கையில் ரூ.500!
கைக்கார மகளிர் மாநாட்டிற்கு கோல்டு சிட்டியில் இருந்து 5,000 பேர் திரண்டு வரணும். 100 பஸ்களில் பங்கேற்க பெண்களை அழைத்து வந்தே ஆகணும்னு மாநில கை கட்சித் தலைவரு, பொன்னகர் தொகுதி ச.ம.உ.,க்கு உத்தரவு போட்டுள்ளார்.
மாற்று பேச்சுக்கு இடம் தராமல் 100 பஸ்களில் ஆட்களை திரட்ட முனிசி., உறுப்பினர்களுக்கு பொறுப்பு கொடுத்தாங்க. பஸ்சில் வருவோருக்கு தலா 500 ரூபாய், காலை டிபன், மதியம் சாப்பாடு கொடுத்து அழைத்து சென்றாங்க.
இதுக்காக ஏழைகள் வசிக்கிற பகுதிகளில் ஆள்பிடிக்கும் ஏஜன்ட்கள் பரபரப்பானாங்க. நடுத்தரமானவர்கள் வசதி படைத்தவர்களை அழைத்ததாக தெரியல. கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துச் செல்ல பல லட்சம் ரூபாய் சும்மா செலவழிக்கிறாங்களே; இது டிரெய்லர் தானாம். தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மெயின் பிக்சர் இருக்குதாம். அதையும் கோல்டு சிட்டி பார்க்கத்தான் போகுது.
தேர்தல் திருவிழா ஆரம்பம்!
மக்கள் தொடர்பே இல்லாமல், தேர்தலோடு தேர்தலை சந்திக்கிற கட்சிகளும், தொகுதி நலனில் ஒரு எள்ளளவும் உதவியாக இல்லாத நபர்களும், வெறும் ஜாதி சான்றிதழ் ஆதாரத்தில் போட்டியிட வருபவர்களும் அதிகரிக்கும் தொகுதியாக கோல்டு சிட்டி உள்ளது.
'மண்ணின் மைந்தர்' என்ற அடையாளத்தை காட்டி பதிவு செய்பவர்களும் கூட அரை டஜன் பேர் வந்துட்டாங்க. மண்ணின் மைந்தரை விட மண்ணை காப்பாற்றும் நபரே தேவையென சிந்திக்கும் நேரம் வர வேண்டுமென்பது பலரின் விருப்பமாக உள்ளது.
பணமே தேர்தலின் துருப்பு சீட்டாம். வரவை நோக்கி உறவுகளை தேடுகிறாங்க. ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வேட்பாளரும் கோடீஸ்வரர்களா இருப்பவர்களுக்கு தான் 'சீட்' வழங்கப்படுகிறது.
கோஷம் போடவும், கொடுப்பதற்கு மேல் சத்தம் போடுவதற்கும் தான் ஏழைகள் பேசப்படுகின்றனர். தேர்தல் திருவிழா, 'ஸ்டார்ட்' ஆகி விட்டது.
தமிழ் வேண்டாமா?
தமிழர் நிறைந்த பொன்விளையும் நகரில் காணப்பட்ட சில பேனர்களில், பொங்கல் விழா, தமிழர் திருநாள் என தெரிவிக்க கூட தமிழை காணோம்.
மண் பெருமையை பேசும் பராக்கிரம சாமிகளின் பேனர்களிலும் தமிழ் இல்லையே. தமிழர்களே தமிழை மறக்கலாமான்னு கட்சி சாயம் பூசாதவர்கள் கேட்கின்றனர். கர்நாடக மாநிலத்திலும் தாய் மொழி கல்விக்கு எங்கும் தடையில்லையாம். ஆனால், கல்வியில் படிக்க வாய்ப்பு தரும் அரசு, வேலைவாய்ப்பில் பாரபட்சம் பார்ப்பது, தடையாக நிற்பதன் அர்த்தம் தான் புரியலையாம்.
ஓட்டு கேட்கும் போது, தமிழை பயன்படுத்தாமல் இருப்பாங்களா. தமிழர் ஓட்டுகளே வேண்டாம் என்பாங்களா. ஓட்டுக்கு தமிழை நாடுபவர்கள் யோசிக்க மறந்துட்டாங்களே.