மயிலாப்பூர், மயிலாப்பூர், நாகேஸ்வர ராவ் பூங்காவில் இடிந்த நிலையிலுள்ள சுற்றுச்சுவரை பராமரிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்து உள்ளது.
சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட மயிலாப்பூர், லஸ் அவென்யூ பகுதியில், நாகேஸ்வர ராவ் பூங்கா உள்ளது. இந்த பூங்கா மொத்தம், 3.8 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த பூங்காவை, தனியார் நிறுவனம் ஒன்று பராமரித்து வருகிறது. இந்த பூங்காவிற்கு, நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இங்கு வேம்பு, பனை, மூங்கில் உள்ளிட்ட பல்வேறு மர வகைகள் உள்ளன. மேலும் மருத்துவம், அலங்காரம் உள்ளிட்ட ஏராளமான தாவர வகைகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்து உள்ளன.
இந்த பூங்காவில் பார்வையாளர்கள், உடற்பயிற்சி செய்வதற்கும், குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கும், பல்வேறு வகையிலான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, இசைக் கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
தற்போது, இந்த பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து உள்ளது. இதை உடனடியாக, புதுப்பிக்க வேண்டும் என, பார்வையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, பார்வையாளர்கள் சிலர் கூறியதாவது:
இங்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நடைபயிற்சி செல்பவர்களின் விருப்பத்திற்குரியதாக, இந்த பூங்கா விளங்குகிறது.
இந்த பூங்காவானது மழை, புயலால் பாதிக்கப்பட்டாலும், உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சரி செய்யப்பட்டு விடும்.
ஆனால், தற்போது இதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, சில வாரங்கள் ஆகிறது. இன்னும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சுற்றுச்சுவரை புதுப்பிக்க, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.