சென்னை, பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறையால், சென்னையில் மது விற்பனை அதிகரித்தது. சென்னையில் பரவலாக அனைத்து இடங்களிலும், அதிகாலை மற்றும் நள்ளிரவில் நேரங்களிலும், 'டாஸ்மாக்' கடைகளிலேயே, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை நடந்து வருகிறது. இதன் காரணமாக, மது குடித்து விபத்தில் சிக்குவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், கடந்த மூன்று நாட்களில், தினசரி 100க்கும் மேற்பட்டோர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதில், தினசரி 50 பேர் விதம் மது போதையால், வாகன விபத்தில் சிக்குதல், படிகட்டில் இருந்து தவறி விழுதல் போன்ற விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
கடந்த 13ம் தேதியில் இருந்து விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதிகாலையிலேயே பலர் மது போதை மற்றும் கஞ்சா போதையில் கீழே விழுந்து, காயத்துடன் வருகின்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முன்வந்தாலும், ஒத்துழைப்பு தர மறுகின்றனர். சிலருக்கு காயமடைந்த பகுதியில் மட்டுமே, மருந்து தடவி விடுகிறோம்.
போதையில் சிகிச்சை பெறுவோரில், ஒருசிலர் மட்டுமே முழு சிகிச்சையை பெற்று வீடு திரும்புகின்றனர். மேலும், காணும் பொங்கலையொட்டி, இன்று விபத்துகளில் சிக்குவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.