சென்னை, பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுபோதையில் வாகனம் ஓட்டிய, 376 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 37.60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
சென்னையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, விபத்து தடுப்பு நடவடிக்கையாக, சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார், நேற்று முன்தினம், 190 இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுபோதையில் வாகனம் ஓட்டிய, 376 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 37.60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதேபோல, இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தது, 'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டியது உட்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, 536 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இன்னும் இரண்டு நாட்களுக்கு தீவிரமாக வாகன சோதனை செய்யப்படும். 'பைக்ரேஸ்' மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தாறுமாறாக வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'என்றனர்.