கொப்பால்,-முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வருகையால், கங்காவதி தொகுதியில், அரசியல் சலசலப்பு அதிகரிக்கிறது. பா.ஜ., காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில், கொப்பால், கங்காவதி தொகுதியில் களமிறங்க பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி தனது தனிக்கட்சி மூலம் தயாராகிறார்.
சில மாதங்களாகவே தொகுதியில் சுற்றி வருகிறார். இங்கு வீடு வாங்கி, கிரஹப்பிரவேசமும் செய்துள்ளார்.
இவர் வருகைக்கு பின், கங்காவதியில் அரசியல் சலசலப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக பா.ஜ.,வும், காங்கிரசும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. பா.ஜ.,வில் இன்னாள் எம்.எல்.ஏ., பரன்னா முனவள்ளி, தனக்கே சீட் என்கிறார். காங்கிரசில் சீட் கேட்டு, மூவர் போட்டி போடுகின்றனர்.
கங்காவதி சட்டசபை தொகுதியில் லிங்காயத், முஸ்லிம், குருபர் சமுதாயங்களின் ஓட்டுகள் அதிகம் உள்ளன.
நகர்ப்பகுதிகளில் முஸ்லிம் ஓட்டுகளும், கிராமப்புறங்களில் குருபர், லிங்காயத் ஓட்டுகள் அதிகம் உள்ளன.
இதற்கு முன் மூன்று முறை, ஸ்ரீரங்கதேவராயலு வெற்றி பெற்றார். 2004ல் காங்கிரசின் இக்பால் அன்சாரி; 2008ல் பா.ஜ.,வின் பரன்னா முனவல்லி; 2013ல் இக்பால்; 2018ல் பரன்னா முனவல்லி என, மாறி, மாறி வெற்றி பெற்றனர்.
கடந்த 40 ஆண்டுகளாக, மூன்று எம்.எல்.ஏ.,க்களை கண்டுள்ள கங்காவதியில், தற்போது ஜனார்த்தன ரெட்டி நுழைந்துள்ளார். கோவில்கள், மடங்கள், மசூதிகளுக்கு சென்று, ஆதரவு திரட்டுகிறார்.
பா.ஜ.,வின் அதிருப்தி தொண்டர்கள், இக்பால் அன்சாரி ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு, தன் கட்சிக்கு இழுக்க முயற்சிக்கிறார்.
'பல்லாரியை போன்று, கங்காவதியை அபிவிருத்தி செய்யப்படும். உலக பிரசித்தி பெற்ற ஆனேகுந்தி, அஞ்சனாத்ரியை மேம்படுத்துவோம்' என பிரசாரம் செய்து, ஓட்டு வேட்டை நடத்துகிறார்.
பரன்னா முனவல்லி, லிங்காயத் ஓட்டுகளையும், இக்பால் அன்சாரி முஸ்லிம், குருபர் ஓட்டுகளை நம்பியுள்ளனர்.
ஜனார்த்தன ரெட்டி வருகையால், பரன்னாவுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஆனால் அவர் கூறுகையில், ''தொகுதியை சேர்ந்தவருக்கு, வாக்காளர்கள் முக்கியத்துவம் கொடுப்பர். நான் மக்களுடன் இருப்பேன். தொலைபேசி தொடர்பில் கிடைக்கிறேன். கட்சியில் எனக்கு சீட் கிடைக்கும். வாக்காளர்களும் கூட, என்னை ஆதரிப்பர்,'' என்றார்.