சென்னை, காணும் பொங்கலை முன்னிட்டு, மக்கள் அதிகம் கூடும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் குப்பை தொட்டிகள் மற்றும் துாய்மை பணியாளர்கள் வாயிலாக, துாய்மை பணிகள் தீவிரப்படுத்தப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கலை முன்னிட்டு, சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்களில் அதிகளவில் மக்கள் கூடி, கொண்டாடி மகிழ்வது வழக்கம். சென்னையை பொருத்தவரையில், மாநகராட்சி பூங்காக்கள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலுார் உயிரியல் பூங்கா, மெரினா, எலியட்ஸ், நீலங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் அதிகளவில் மக்கள் கூடுவர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மாநகராட்சி சார்பில் தீவிர துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழக்கமான அளவிலான குப்பை தொட்டிகளை விட கூடுதலாக குப்பை தொட்டிகள், துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேசன் கூறியதாவது:
காணும் பொங்கலில், கடற்கரையில் அதிகளவில் மக்கள் கூடுவர் என்பதால், துாய்மை பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை, நீச்சல் குளம், சர்வீஸ் சாலை என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, துாய்மை பணி மேற்கொள்ளப்படும். கடற்கரையில், தினசரி 37 குப்பை தொட்டிகள் பயன்படுத்தப்படும்.
அவற்றுடன் கூடுதலாக 26 தொட்டிகள் அமைக்கப்படும். மேலும், இன்று நள்ளிரவு முதல் கடற்கரை பகுதிகள் துாய்மைப்படுத்தும் பணி துவங்கப்படும். அதற்காக, 90 பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்படுவர்.
எலியட்ஸ் கடற்கரையில் 50 பேட்டரி வாகனங்களும், 20 பணியாளர்களும் கூடுதலாக பணியமர்த்தப்படுகின்றனர். அதேபோல், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலங்கரை கடற்கரையில் கூடுதலாக 15 பணியாளர்கள், டிராக்டர், பேட்டரி வாகனங்கள் வாயிலாக துாய்மை பணி நடைபெறும்.
இவ்வாறு கூறினார்.