யானைகவுனி, சென்னை, முகப்பேர் மேற்கு, ஆறாவது பிளாக்கை சேர்ந்தவர் மரியா மைக்கேல், 55. இவர் பார்க் டவுன், கிருஷ்ணப்பா மேஸ்திரி தெருவில் தங்க நகை கடை வைத்துள்ளார்.
இவருக்கு நன்கு தெரிந்த கமலேஷ் என்பவர், தங்கக் கட்டி கொடுத்தால் பணம் தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி, 2022, அக்., 21ல் கமலேஷிடம் உட்பட மூவரிடம், 870 கிராம் தங்கக்கட்டிகளை கொடுத்துள்ளார்.
தங்க கட்டிகளை வாங்கிக் கொண்டு, 44 லட்ச ரூபாய் தருவதாக கூறிச் சென்றவர்கள் தலைமறைவாயினர்.
இதுகுறித்து யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவானவர்களை போலீசார் தேடி வந்தனர். குற்றவாளிகள் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று, ராஜஸ்தானை சேர்ந்த கமலேஷ், 30, சவுக்கார்பேட்டையை சேர்ந்த லலித்குமார், 33, மின்ட் தெருவை சேர்ந்த அமித் புரோஹித், 21 ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 600 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.