திருவாலங்காடு,-திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில், பொங்கலை ஒட்டி திருவாலங்காடு பகுதியில் சாலையோரங்களில் இறைச்சி கடைகள் புற்றீசல் போல தோன்றியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
திருவாலங்காடு பகுதியில், மாட்டுப்பொங்கலான நேற்று, இறைச்சியின் தேவை அதிகரித்ததால், தேரடி முதல், சர்க்கரை ஆலை நான்கு ரோடு வரை, 80க்கும் மேற்பட்ட கோழி, ஆடு, மீன், மாடு, பன்றி உள்ளிட்ட இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டன.
இவர்கள் நெடுஞ்சாலை ஓரத்திலேயே கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.
இந்நிலையில், இறைச்சி வாங்க வந்த வாடிக்கையாளர்கள் சாலையிலேயே தாங்கள் வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சென்றனர்.
இதனால், திருவாலங்காடு -- அரக்கோணம் சாலையில் சர்க்கரை ஆலை -தேரடி வரை சாலையின் இருபுறமும் 'பார்க்கிங்' போல, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
இதனால், அந்த வழியாக சென்ற, ஆட்டோ, கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாகவே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.