சோழவரம்--சோழவரம் அடுத்த, விஜயநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின், 28. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே யார் பெரியவர் என்பதில் போட்டி இருந்து வந்தது. இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
மூன்று மாதங்களுக்கு முன், அஸ்வின், சோழவரம் அடுத்த, பூதுார் கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். அங்க வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, உறவினரை பார்ப்பதற்காக விஜயநல்லுார் சென்றார்.
அங்கு, மூன்று பேர் கொண்ட கும்பல், அஸ்வினை வழிமடக்கி கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த அஸ்வினை, பாடியநல்லுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார்.
இது தொடர்பாக, சோழவரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார்.
அதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன் விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து, கொலை வழக்கில் தொடர்புடைய சோழவரம் அடுத்த, நல்லுார் பகுதியைச் சேர்ந்த சரத், 20, வினோத், 24, வேலப்பன், 26, ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.