தாம்பரம் ஜார்க்கன்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கும்கும் குமாரி, 19. பூனம், 20. ஷர்மிளா குமாரி, 24.
மூன்று பேரும், தாம்பரம்- - திருநீர்மலை சாலையில், கடப்பேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
விடுதியில், நேற்று காலை, கும்கும்குமாரி, 'பவர் பேங்க்' இணைத்தபடி பால்கனியில் நின்று மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, பால்கனியில் காயவைத்திருந்த துணி வெளிப்புறம் விழுந்தது. கும்கும்குமாரி, மொபைல் போனில் பேசியபடி, இருக்கை மீது ஏறி, அந்த துணியை எடுக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியாக சென்ற உயரழுத்த மின் வடத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டார்.
தொடர்ந்து, முதல் தளம் முழுதும் மின்சாரம் பாய்ந்ததால், விடுதி அறைகளில் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த பூனம், ஷர்மிளா குமாரி ஆகியோர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அங்கிருந்தவர்கள், மூன்று பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
படுகாயமடைந்த கும்கும்குமாரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற இருவர், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.