புதுடில்லி :உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொதுப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் விதமாக, நீதிபதிகளை தேர்வு செய்யும் 'கொலீஜியம்' அமைப்பில், மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம் எழுதியுள்ளார். இதன் வாயிலாக, நீதித்துறை - மத்திய அரசு இடையே கடந்த ஓராண்டாக நிலவி வரும் மோதல் மேலும் முற்றியுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வது குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் முடிவு செய்கிறது.
இது தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளின் பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது குறித்து கொலீஜியத்திடம் மத்திய அரசு கேள்வி எழுப்பும்; இல்லையெனில் அந்த பட்டியலை ஏற்று, நீதிபதிகளுக்கான நியமனத்தை மத்திய சட்டத்துறை முன்னெடுக்கும்.
மோதல்
இதற்கிடையே, நீதிபதிகளை நியமிப்பதற்கு தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை, மத்திய அரசு 2014ல் கொண்டு வந்தது. இதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததற்கு, பல முன்னாள், இந்நாள் மத்திய அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் பங்கு இருக்க வேண்டும் என்பது மத்திய அரசு தரப்பு வாதமாக உள்ளது. ஆனால், கொலீஜியம் நடைமுறையில் அரசு தலையிடுவதை நீதிபதிகள் விரும்பவில்லை.
இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திரிணமுல் காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
பரிந்துரை
மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த நவம்பர் மாதம் அளித்த பேட்டியில், 'நீதிபதிகளை பரிந்துரை செய்யும் கொலீஜியம் அமைப்பு அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது' என கூறியிருந்தார். இதேபோல் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும், சட்டசபையின் அதிகாரங்களை நீதித்துறை ஆக்கிரமிப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடுக்கு, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் மத்திய - மாநில அரசு தரப்பில் இருந்து பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
நீதித்துறை - மத்திய அரசு இடையே கடந்த ஓராண்டாக நிலவி வரும் மோதல், இந்த கடிதத்தின் வாயிலாக மேலும் முற்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:நீதிபதிகளை பரிந்துரை செய்யும் கொலீஜியத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் தான். ஆனால், கொலீஜியம் தன் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. நீதித்துறையை மிரட்டி, அதை முழுதுமாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ., அரசு திட்டமிடுகிறது. இந்திய அரசியலமைப்பில் நீதித்துறை தான் உயர்ந்த இடத்தில் உள்ளது. அதை சீர்குலைக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.இதேபோல், புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மத்திய சட்ட அமைச்சரின் யோசனை மிகவும் ஆபத்தானது. நீதித்துறை நியமனங்களில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது' என கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சஞ்சீவ் குமார் திவாரி என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, இரண்டு நீதிபதிகள் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மறு ஆய்வு மனு என்ற பெயரில் இந்த வழக்கில் மனுதாரர் மறு விசாரணை கோரியுள்ளார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது' எனக்கூறி, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.