திருத்தணி,-மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, நேற்று, மாடுகளுக்கு புது கயிறுகள் வாங்கியும், பூஜைகள் செய்தும் விவசாயிகள் வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் விழாவும், நேற்று மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மாவட் டம் முழுதும் உள்ள விவசாயிகள் தங்களது மாடுகளை குளிப்பாட்டி, புது வண்ண கயிறுகளால் அலங்கரித்தனர்.
அந்த வகையில் திருவள்ளூர் வீரராகவ கோவில் சார்பில் இயங்கி வரும் கோ சாலையில் உள்ள மாடுகளுக்கு நேற்று, மாட்டுப்பொங்கலை ஒட்டி, மாடுகள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டன.
தொடர்ந்து மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும், புதுகயிறுகளால் அலங்கரித்து, பூஜை செய்தும் வழிபட்டனர்.
இதே போல், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது மாடுகளை குளிப்பாட்டி, புதிய கயிறுகள், சலங்கைகள் அணிவித்தும், கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மேலும், கிராமங்களில் மாட்டுப்பொங்கல் தினத்தன்றும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதுதவிர பல்வேறு இளைஞர்கள், பெண்கள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, திருத்தணி பஜாரில் விவசாயிகள் புது கயிறுகள் மற்றும் வண்ண டப்பாக்கள் வாங்கிச் சென்றனர்.