திருவள்ளூர்-திருவள்ளூர் பெரியகுப்பம் நகராட்சி ஆரம்ப சுகாதார மையம் பழுதாகியதால், அங்கு வரும் கர்ப்பிணியர், நோயாளிகள் பாதுகாப்பு இன்றி அவதிப்பட்டனர். இதையடுத்து, அந்த இடத்தில், 1.18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட, நகராட்சி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் வாயிலாக, பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகில் வள்ளலார் நகரில், ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.
பரிசோதனை
இங்கு, பெரியகுப்பம், என்.ஜி.ஓ., காலனி, ராஜாஜிபுரம், மணவாள நகர், வெங்கத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 160 பேர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இங்கு கணிசமான அளவில் சர்க்கரை, இதய அழுத்தம் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு நகராட்சி தாய் சேய் நல விடுதியும் செயல்படுவதால், தினமும், 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் பரிசோதனைக்காக வந்து செல்கின்றனர்.
50 ஆண்டுகள்
குறிப்பாக, புதன்கிழமையன்று, நுாற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் வாராந்திர ஆலோசனைக்கும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வருகின்றனர்.
இங்கு, சுக பிரசவம் மட்டும் இங்கு நடைபெறும். இதற்காக, பிரசவ அறை, குழந்தை பெற்றவர்கள் தங்குவதற்கு படுக்கை வசதியும் உள்ளது.
மாதத்திற்கு 30 - 40 பிரசவம் இங்கு நடைபெறுகிறது. இந்த சுகாதார மையம் ஆரம்பித்து, 50 ஆண்டுக்கும் மேலாக உள்ளதால், கட்டடம் பழுதடைந்து உள்ளது. மழைக் காலத்தில் இங்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கூடுதல் வசதி
தற்போது, மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், ரயில் நிலையம் அருகில் இருப்பதால், வெளியூர்களில் இருந்து வருவோர், அவசர சிகிச்சை பெற அதிகளவில் வருகின்றனர்.
அதிகரித்து வரும் நோயாளிகள் வசதிக்காக, இம்மையத்தில் கூடுதல் வசதி அதிகரிக்க வேண்டும் என, நகராட்சி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று, தற்போது, இம்மையத்தை மேம்படுத்த, நகராட்சி நிர்வாகம், 1.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
இந்த நிதியில், வள்ளலார் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
இதன் வாயிலாக, நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் வசதிகள் வருவதுடன், நோயாளிகளுக்கு இடநெருக்கடி ஏற்படாமல், எளிதாக சிகிச்சை பெற்று செல்லலாம்.
திருவள்ளூர் நகராட்சியில் வசிப்போருக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்க நகராட்சி சார்பில், பெரியகுப்பம் வள்ளலார் நகரில், 50 ஆண்டுக்கு முன், நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி செயல்பாட்டில் உள்ளது.
இந்த மையம் தற்போது, பழுதடைந்து உள்ளதால், புதிய கட்டடம் கட்ட, 1.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் மாவட்ட சுகாதார அலுவலக அனுமதி பெறப்பட்டு, டெண்டர் விடுக்கப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கும்.
பா. உதயமலர், நகராட்சி தலைவர், திருவள்ளூர்.