'ஆன்லைன்' வர்த்தக தளங்களில் பொருட்கள் வாங்குவோரை குறிவைத்து, வங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள், தற்போது சர்வசாதாரணமாக அரங்கேறி வருகின்றன. சமீபகாலமாக காவல் நிலையங்களில், இது தொடர்பான புகார்கள் ஏராளமாக குவிந்து வருகின்றன. எனவே பொதுமக்கள், மோசடி கும்பலிடம் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
'ஆன்லைன்' வர்த்தக தளங்களில் பொருட்கள் வாங்குவது, விற்பது தற்போது சர்வசாதாரணமாகி விட்டது. வீட்டில் இருந்தபடியே ஒருவர் தொழில்முனைவோராக மாறலாம் என்ற நிலைமை, இந்த ஆன்லைன் வர்த்தக தளங்களால் உருவாகி உள்ளது.
சைபர் கிரைம்
அதேபோல், வீண் அலைச்சல், கால விரயமின்றி நமக்கு தேவையான பொருட்களை, ஆன்லைன் தளங்களை பார்த்து வாங்கி கொள்ளலாம். இது போன்ற சாதக விஷயங்கள் ஒருபுறமிருக்க, பாதகமான விஷயங்களும் இருக்கின்றன.
சிலர் தேவையை தாண்டி, விளம்பரங்களை பார்த்து மயங்கி பொருட்கள் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதற்கு உதாரணம், தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்துள்ள சைபர் கிரைம் குற்றங்களே.
ஒவ்வொரு விதம்
சமீபத்தில் அரங்கேறிய மோசடி வழக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அதில் ஒன்று 'நீங்கள் அனுப்பிய பார்சலில் போதை பொருட்கள் இருக்கிறது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'வழக்கில் இருந்து தப்பிக்கவும், போலீசாரை சரி கட்டவும் 5 லட்சம் ரூபாய் வரை பணம் தர வேண்டும்' என, மோசடி பேர்வழிகள் 'அறை எடுத்து யோசித்து' வலை விரித்துள்ளனர்.
இதில், அப்பாவிகள் பலரை மாட்ட வைத்து, பணம் பறித்துள்ளனர்.
மற்றொன்று, கடந்த மாதம் மின்சார கட்டணம் செலுத்தவில்லை. உங்களது மின் இணைப்பு இன்றைக்குள் துண்டிக்கப்படும். மின்சார கட்டணம் செலுத்துவதற்கு, ஒரு 'மொபைல் ஆப்' பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள் என்பர்.
அந்த 'மொபைல் ஆப்'பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த துவக்கினால், வங்கி கணக்கில் லாவகமாக கொள்ளையடித்து செல்வர். இதுபோன்று ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இந்த அழைப்புகளை நம்பி, அவசரகதியில் செயல்படாமல் தீர விசாரித்து செயல்படுங்கள்.
இதுபோல், பல வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி, அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணம் பறிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
இது குறித்து, காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், தொடர்ந்து மோசடி கும்பல், புது புது விதங்களில் மோசடி செய்வது தொடர் கதையாகி உள்ளன.
இதில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் பறிகொடுப்போர் மட்டுமே காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
அதைவிட குறைவாக தொகையை பறிக்கொடுப்போர் காவல் நிலையம் சென்று புகார் அளிப்பதில்லை எனக்கூறப்படுகிறது. அவ்வாறு புகார்கள் அளிக்கப்பட்டாலும், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த வரிசையில், ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோரை குறிவைத்து மோசடி கும்பல், தற்போது அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது புது ரகம்
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
சமீப காலமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோரை குறிவைத்து மோசடிகள் நடந்து வருகின்றன.
ஆன்லைனில், எந்தெந்த தளத்தில் பொருட்கள் வாங்குகின்றனர் போன்ற தகவல்களை சேகரிக்கும் மோசடி கும்பல், அவர்களிடம் நீங்கள் ஆறு மாதத்திற்கு முன், இந்த பெயரில், இந்த பொருட்களை வாங்கியுள்ளீர்கள் என, அவர்களுக்கு ஞாபகமில்லாத பொருட்களின் பெயரை கூறுவர். அதேநேரம், வாடிக்கையாளர் பெயரையும், அவர்கள் பொருட்கள் வாங்கும் தளத்தின் பெயரையும் கூறுவர். அந்த பொருட்கள் தற்போது தான் வந்துள்ளது.
அவற்றை உங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், உங்களது மொபைல் போனுக்கு நான்கு இலக்க 'ஒன் டைம் பாஸ்வேர்டு' என்ற ஓ.டி.பி., வரும். அதை தெரிவியுங்கள் என்பர்.
நீங்கள் சுதாரித்து, எங்களுக்கு பொருட்கள் வேண்டாம் என்றாலும், பொருளை ரத்து செய்வதற்கும், உங்களுக்கு ஓ.டி.பி., வரும், அவற்றை நீங்கள் சொன்னால் தான் பொருளை திருப்பி அனுப்ப முடியும் என்பர்.
நீங்கள் போனை துண்டித்தாலும், அடுத்த நாள், நீங்கள் பொருட்கள் வாங்கும், குறிப்பிட்ட தளத்தின் பெயரை குறிப்பிட்டு தானியங்கி முறையிலான மொபைல் அழைப்புகள் தொடர்ந்து உங்களுக்கு வரும்.
அதில், நீங்கள் 'புக்' செய்த பொருளை வாங்க நினைக்கிறீர்களா, இல்லையா என கேள்வி எழுப்பி, ஒன்று அல்லது இரண்டு அழுத்த கூறும். நீங்கள், எந்த எண்ணை அழுத்தினாலும், உங்களுக்கு அடுத்தடுத்த நாட்களில், தானியங்கி மொபைல் அழைப்பு வந்தபடி இருக்கும்.
சில நாட்களுக்கு பின், குறிப்பிட்ட தளத்தில் இருந்து பேசுகிறோம்.
நீங்கள் புக் செய்த பொருளை, ரத்து செய்ய வேண்டும் என்றால், ஓ.டி.பி., அளித்தால் தான் முடியும். இல்லையென்றால், தொடர்ந்து மொபைல் போன் அழைப்புகள் வந்து உங்களை தொந்தரவு செய்யும் என்பார்.
தொடர்ந்து அளிக்கப்படும் தொந்தரவுக்கு பின், சம்பந்தப்பட்ட நிறுவன தளத்தில் இருந்து தானே வருகிறது என, நீங்கள் ஓ.டி.பி., எண் அளித்து விட்டால், உங்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி கும்பல் பறித்து விடுவர்.
பகிர வேண்டாம்
எனவே, ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோர், பொருட்கள் வாங்கும் தளத்தின் பெயரை பயன்படுத்தி குறுஞ்செய்தியில் வரும் ஓ.டி.பி., எண்களை யாரிடமும் பகிர வேண்டாம். பலமுறைகளில் மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கிரிமினல்கள் உபயோகிக்கும் சைபர் கிரைம் செயல்முறைகள் குறித்து அறிந்து கொள்ள, 'க்யூ.ஆர்., ஸ்கேன்' மாநகர போலீசாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 'க்யூ.ஆர்., ஸ்கேன்' செய்து, கிரிமினல் செய்யும் குற்றங்களை தெரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற மோசடிகள் அறிந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -