திருப்பூர்:திருப்பூரில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம், நான்கு நாளில், 50 ஆயிரம் பேர், வெளியூர் பயணித்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து சேலம், மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த, 12 ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. முதல் இரு நாட்கள் எதிர்பார்த்த கூட்டமில்லை; இரவு நேர பஸ்களும் பயணியர் இல்லாமல் காலியாகவே சென்றது.
போகியன்று (14ம் தேதி) மாலைக்கு பின் பஸ் ஸ்டாண்டில் மெல்ல கூட்டம் அதிகரித்தது. அடுத்த நாள் (ஞாயிறு) காலை முதல் மதியம் வரை சிறப்பு பஸ்களில் பயணிகள் கூட்டத்தை காண முடிந்தது. அதே நேரம், சிறப்பு பஸ்கள் நிறைந்து வழியும் அளவில் கூட்டமில்லை. போக்குவரத்து அதிகாரிகள் சோர்வடைந்தனர்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
பொங்கல் விடுமுறை நாட்கள் குறைவு என்பதால், பள்ளி, கல்லுாரிகள், 18ம் தேதி திறக்கப்படுவதால், பெரும்பாலானோர் வெளியூர் பயணிக்கவில்லை. இங்கேயே பொங்கல் வைத்து, கொண்டாடி விட்டனர்.
சிறப்பு பஸ் இயக்கும் அளவுக்கு கூட்டமில்லை. கடந்த ஆண்டை விட, 30 சதவீதம் கூட்டம் குறைவு.
கடந்த நான்கு நாட்களில், 50 ஆயிரம் பேர் வெளியூர் சென்றனர். 15ம் தேதி தான். 25 ஆயிரம் பேர் சிறப்பு பஸ்களில் பயணித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், 'வெளியூர் சென்றவர்கள் திருப்பூர் திரும்ப வசதியாக இன்று முதல், 22ம் தேதி வரை கூட்ட நெரிசலுக்கு ஏற்ப சிறப்பு பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள்,' தெரிவித்தனர்.