திருவாலங்காடு,--கனகம்மாசத்திரம் - பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த வாகனங்களின் வேகம் குறைக்கவும், விபத்துகளைத் தடுக்கவும், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பள்ளி, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்களில், நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடை அமைத்து உள்ளனர்.
திருவாலங்காடு ரயில் நிலையம் அடுத்த, ஓரத்துார் பகுதியில் இருந்து காலனி வரை ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடை ஏற்படுத்தி உள்ளனர்.
ஆனால், வண்ணம் பூசப்படாததால், வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் வேகமாக சென்று விபத்துக்குஉள்ளாகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலையில் உள்ள வேகத் தடைகளுக்கு வண்ணம் பூச வேண்டும். மேலும், ஒளிரும் விளக்கு பட்டை அமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.