-நமது நிருபர்-
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, பத்தாண்டுகளாக முடங்கிக் கிடந்த பஸ் ஸ்டாண்டை, மீண்டும் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சி, மீண்டும் தோல்வியடைந்துள்ளது. இதை செயல்படுத்த முடியவில்லை என்றால், அதை ஒப்புக்கொண்டு வேறு பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்த முன்வர வேண்டும்.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னுார், கோத்தகிரி, ஊட்டிஆகிய நகரங்களுக்கும்,நீலகிரி வழியாக கேரளா, கர்நாடகாவுக்கும்செல்லும் பஸ்கள், காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத்தவிர்க்க, மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் அருகில், 2010ல், தி.மு.க.,ஆட்சியின் போது புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்ட்டை, அன்றைய துணை முதல்வராக பதவி வகித்த ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட பின்னும், அங்கிருந்து பஸ்களை இயக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் மறுத்தனர்.
தி.மு.க., ஆட்சியில் திறந்த பஸ் ஸ்டாண்ட் என்ற ஒரே காரணத்துக்காக, பத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சியில் இந்த பஸ் ஸ்டாண்ட் முடக்கப்பட்டது.
இது தொடர்பாக, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காந்திபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டாலும், இந்த பஸ் ஸ்டாண்ட்டுக்குள் கட்டாயம் வந்து செல்ல வேண்டுமென்று, ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், ஆட்சி மாறியும் இதே நிலை நீடித்தது.
நமது நாளிதழில் செய்தி வெளியிட்டு, இதை சுட்டிக்காட்டிய பின், கடந்த ஜூலையில் கோவை கலெக்டர் சமீரன் தலைமையில், பல்வேறு துறை அதிகாரிகளும் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சிவகுருநாதன், அரசு போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும்,கூட்டு ஆய்வில் பங்கேற்றனர்.
அனைத்து மொபசல் பஸ்களும், பஸ் ஸ்டாண்ட்டுக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.டி.ஓ.,வுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவிட்ட சில நாட்களுக்கு, பெயரளவுக்கு சில பஸ்கள் மட்டும், பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து சென்றன.
அதன்பின், கடந்த நான்கு மாதங்களாக, எப்பவாவது வந்து செல்லும் ஓரிரு அரசு பஸ்களைத் தவிர, வேறு எந்த பஸ்களும் பஸ் ஸ்டாண்டினுள் நுழைவதில்லை. இதனால், பஸ் ஸ்டாண்ட் வனாந்தரம் போல வெறிச்சோடிக் கிடக்கிறது.
மாநகராட்சியும் மறந்ததேன்?
இந்த பஸ் ஸ்டாண்டில், பயணிகளுக்குக் கூடுதல் வசதிகளைச் செய்து கொடுப்பதாக, கடந்த ஜூலையில் கலெக்டரிடம் உறுதியளித்த மாநகராட்சி நிர்வாகமும், அதை இன்று வரை செய்ததாக தெரியவில்லை.
பஸ் ஸ்டாண்டுக்குள் வராத பஸ்களுக்கு அபராதம், பர்மிட் சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எதையுமே செய்ய இயலாவிடில், இந்த பஸ் ஸ்டாண்டை நிரந்தரமாக மூடி, மார்க்கெட் அல்லது வணிக வளாகமாக மாற்றி, மாநகராட்சிக்கு வருவாய்க்காவது ஏற்பாடு செய்ய வேண்டும்.
முதல்வர் திறந்து வைத்த பஸ் ஸ்டாண்டுக்கே இந்த நிலை என்றால், மற்ற திட்டங்களைப் பற்றி கேட்கவா வேண்டும்?