பா.ஜ., வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று புதுடில்லியில் துவங்கியது. இதில், ''இந்தாண்டில் நடக்கவுள்ள ஒன்பது மாநில சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டும். ஒரு மாநில தேர்தலில் கூட வெற்றியை நழுவவிடக் கூடாது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, கட்சி நிர்வாகிகளிடம் உறுதிபட தெரிவித்தார்.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு முன்னதாக இந்தாண்டு வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் ஆகியவற்றிலும், தென் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானாவிலும் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன.
தேசிய செயற்குழு கூட்டம்
வட மாநிலங்களான மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றிலும் தேர்தல்கள் நடக்கவுள்ளன. லோக்சபா தேர்தல் மற்றும் இந்த ஒன்பது மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பா.ஜ., இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று புதுடில்லியில் துவங்கியது.
இதில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள், 350 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து நட்டா பேசியதாவது:
அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தல்மட்டுமல்லாமல், இந்தாண்டு நடக்கவுள்ள ஒன்பது மாநில சட்டசபை தேர்தல்களும் நமக்கு முக்கியம். இந்த தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். ஒரு மாநிலத்தில் கூட வெற்றியை நழுவ விட்டு விடக் கூடாது. இதற்கு இப்போதே தயாராக வேண்டும். குஜராத் மாநிலத்தில் நமக்கு கிடைத்த அபாரமான வெற்றி, பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் நாம் தேர்தல் பணிகளில் களம் இறங்க வேண்டும்.
அபார வளர்ச்சி
ஹிமாச்சல பிரதேசத்தில்நமக்கும், காங்கிரசுக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம், 1 சதவீதம் தான். இந்த, 1 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் எந்த வெற்றியையும் தவற விட்டு விடக் கூடாது. நம் வெற்றியை குறிவைத்து, 72 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும். ஏற்கனவே, 1.32 லட்சம் ஓட்டுச்சாவடிகளை பலப்படுத்தி உள்ளோம். அயோத்தியில் ராமர் கோவில், நம் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன்
கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் போன்றவை பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிடுவார். அதேபோல், ராமர் கோவிலும் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் பிரிட்டனை நாம் பின்னுக்கு தள்ளியுளளோம். மொபைல் போன் தயாரிப்பில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளோம். கார் தயாரிப்பிலும் நம் நாட்டில் அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
அக்னிபத் வீரர்கள்: பிரதமர் பெருமிதம்
ராணுவத்தில் வீரர்களை சேர்ப்பதற்காக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள, 'அக்னிபத்' திட்டத்தின் கீழ், அடிப்படை பயிற்சியை துவக்கியுள்ள முதல் குழுவினரிடையே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
நம் ராணுவத்தை பலப்படுத்தவும், சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தவும், இந்த அக்னிபத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சேர்ந்துள்ள இளம் வீரர்கள், நம் ராணுவத்தை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் மாற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த 21ம் நுாற்றாண்டில் போரிடும் வழிகள் மாற்றம் அடைந்து வருகின்றன. இதில், இந்த அக்னிபத் வீரர்கள் முக்கியபங்கு வகிப்பர். கடற்படையில் இணைந்துள்ள பெண்கள் அணி, அக்னி வீரர்கள் குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. முப்படைகளிலும் இந்த பெண்கள் அணியினர் பணியாற்றும் காலம் விரைவில் வரும். 21ம் நுாற்றாண்டுக்கு அக்னி வீரர்கள் தலைமை தாங்குவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லியில் பிரமாண்ட பேரணி
பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் துவங்குவதற்கு முன், பிரதமர் மோடி, நேற்று புதுடில்லியில் பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார். படேல் சவுக்கில் துவங்கிய இந்த பேரணி, செயற்குழு கூட்டம் நடக்கும், புதுடில்லி மாநகராட்சியின் மாநாட்டு அரங்கம் வரை நடந்தது.
சாலையின் இரு புறமும் திரண்டுஇருந்த பா.ஜ., தொண்டர்கள் வாழ்த்துக் கோஷங்களை எழுப்பியதுடன், பிரதமர் மீது பூக்களை துாவி வாழ்த்தினர். புதுடில்லி முழுதும் பிரதமர் மற்றும்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தலைவர் நட்டா ஆகியோர் இடம் பெற்றிருந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பிரதமர் மோடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருந்த திட்டங்களை விளக்கி, பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. - நமது சிறப்பு நிருபர் -