அவிநாசி:கொங்கு மண்டலத்தில், பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின், தெற்கு பகுதியில் (மங்கலம் ரோடு) கடந்த 2013--14ல், திருப்பூரை சேர்ந்த உமாசங்கர் - சாந்தி அறக்கட்டளை சார்பில், பல லட்சம் ரூபாய் மதிப்பில், நட்சத்திர நந்தவன பூங்கா அமைக்கப்பட்டது.
பூங்காவில், 27 நட்சத்திரத்துக்கு உகந்த மரக்கன்றுகள் நடப்பட்டன. மற்றும் 12 ராசி மற்றும் நவகிரகத்திற்கான, மூலிகை நந்தவனம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமும் காலை மற்றும் மாலையில், பக்தர்களுக்காக, பூங்கா திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. நாளடைவில், கோவில் நிர்வாகம் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால், விளையாட்டு சாதனங்கள், நடைபாதை, மூலிகை மரக்கன்றுகள் நட்டு வைத்துள்ள இடங்கள் என அனைத்து இடத்திலும், புதர்கள் மண்டி அடர்ந்த காடாக மாறி காட்சியளிக்கிறது.
புதரா... பூங்காவா?
இதுதவிர, பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஊர்வனங்கள், பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்து விட்டது. இவ்வாறு, நட்சத்திர பூங்கா என்ற அந்தஸ்தை இழந்த அப்பூங்காவுக்கு செல்ல பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இதுதவிர, கோவில் நிர்வாகமும், பூங்காவை பூட்டியே வைத்திருந்தது.
நட்சத்திரப் பூங்காவை, 'பார்க்கிங்' ஏரியாவாக மாற்றி, கோவில் நிர்வாகம் 'புதுமை' புகுத்தி உள்ளது. தற்போது, பூங்காவில், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தும் 'பார்க்கிங்' ஏரியாவாக மாற்றி வசூல் செய்கின்றனர்.
சைக்கிள் - 3 ரூபாய், டூவீலர் - 5 ரூபாய், கார் - 20 ரூபாய், பஸ் மற்றும் சுற்றுலா வேன்களுக்கு வாகனங்களுக்கு 40 ரூபாய் என அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். முற்றிலும், 'பார்க்கிங்' ஆக மாறியதால், யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விரைவில் சீரமைப்போம்!
இது குறித்து, கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறியதாவது :
திருப்பூரை சேர்ந்த 'கஸ் கிளாத்திங் கம்பெனி' மற்றும் உமாசங்கர் - சாந்தி அறக்கட்டளையினர் சார்பில், நட்சத்திரப்பூங்கா அமைத்து கொடுத்தனர்.
பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள் கொரோனா காலகட்டத்தில் இருந்து உபயோகப்படுத்த முடியாமல் துருப்பிடித்தும், ஒரு சில சாதனங்கள் மிகவும் பழுதடைந்தும் விட்டது.
இதனால், குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. கோவில் வளாகத்தில் இடமில்லாததால், வானங்களை நிறுத்த அனுமதித்துள்ளோம்.
விரைவில் கோவில் நிர்வாகம் சார்பில் பூங்காவை புனரமைத்து, விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டு, மீண்டும் பசுமை தவழும் வகையில், நந்தவனமாக மாற்றும் முயற்சியை எடுப்போம் .
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement