கோவை;சென்னையில் நடக்கும் மாநில அளவிலான பாரா தடகளப்போட்டியில், கோவையை சேர்ந்த 40 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில், 2வது மாநில சப் - ஜூனியர் மற்றும் 18வது மாநில சீனியர் பாரா தடகள போட்டிகள், சென்னை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் நாளை துவங்குகின்றன.
இப்போட்டியில் பங்கேற்க, கோவை மாவட்ட பாரா ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் தேர்வு நடத்தி, அதிலிருந்து 40 வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்வானவர்களுக்கு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வளாகத்தில், 10 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
மாநில அளவிலான போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தகுதி பெறுவர்.