-நமது நிருபர்-
கோவையில் கடந்த ஆண்டில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது, கோவை மாநகர காவல்துறைக்கு புதிதாக அறிவிக்கப்பட்ட மூன்று போலீஸ் ஸ்டேஷன்களையும், இன்னும் துவக்காமலிருப்பது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்த ஆண்டு அக்.,23ல் கார் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். அவரின் வீட்டிலிருந்து 75 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடன், சென்னையில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில், சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில், புதிதாக போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் மூன்று மாதங்களாகியும், இப்போது வரை புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் துவங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
அதேபோன்று, கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகளாகி விட்ட நிலையில், மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வடவள்ளி மற்றும் துடியலுார் போலீஸ் ஸ்டேஷன்கள், இன்னும் ரூரல் போலீஸ் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.
இதை மாநகர காவல்துறையுடன் இணைக்க வேண்டுமென்று, மாநகர காவல்துறை கமிஷனர் அனுப்பிய பரிந்துரையும், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் துவங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருப்பதாக, போலீஸ் உயரதிகாரிகள் காரணம் கூறி வருகின்றனர். முதல்வரின் கையில் காவல்துறை இருக்கும் நிலையில், அத்துறைக்குத் தேவையான இடத்தைத் தேடிக் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
அதற்கேற்ப, மாநகர காவல்துறை கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இதற்காக தீவிர முயற்சி எடுத்தார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இத்தனைக்கும், தமிழக காவல்துறை டி.ஜி.பி.,சைலேந்திரபாபு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் எல்லோருமே, கோவையில் பணியாற்றியவர்கள்தான்.
தேவையிருந்தும், ஏற்கனவே அறிவித்தும், அரசு அசையாமலிருக்க காரணம், கோவை மீதான புறக்கணிப்புதான் காரணமா?