பல்லடம்:வீடுகளில், பாதுகாப்புக்காகவும், செல்லப் பிராணிகளாகவும் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. வாகன ஓட்டிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வீதிக்கு ஒரு நாய் என்று இருந்த நிலை மாறி, 10 முதல் 15 நாய்கள் வரை பெருகி விட்டது. இவ்வாறு, கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்கள், நடந்து செல்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்துகின்றன. தெரு நாய்களால் மட்டும், மாதம் சராசரியாக, 60க்கும் மேற்பட்டவர்கள் கடிபடுகின்றனர்.
இதுதவிர, நாய்கள் துரத்துவதால், வாகனங்களில் இருந்து தவறி விழுந்து காயம் அடைப்பவர்களின் பட்டியல் நீளும். மாநகராட்சி பகுதிகளில், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுகின்றன.
ஆனால், நகராட்சி, மற்றும் ஊராட்சி பகுதிகளில், நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு உண்டான போதிய வசதிகள் கிடையாது.
இதனால், தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி பெருகி வருகின்றன. பொதுமக்களின் பாதுகாப்புக்காகத்தான் நாய்கள் என்றாலும், அவற்றால் ஏற்படும் அச்சம், பாதிப்புகள் பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.
பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'பெருகிவரும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி, ஊராட்சிகளில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. நாய்களை ஏதாவது செய்தால், விலங்கு ஆர்வலர்கள் நடவடிக்கை பாயும் என்ற அச்சம் உள்ளது. நாய்களால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
எனவே, விலங்கு ஆர்வலர்கள், மற்றும் நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.