கோவை:கோவை வ.உ.சி., உயிரியல் பூங்கா மூடியிருப்பதால், பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வ.உ.சி., உயிரியல் பூங்காவில் வாத்து, மயில், முதலை, பாம்பு, கிளி, மான் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன.
இதன் அருகாமையில் உள்ள பூங்கா வளாகத்தில், சிறுவர் - சிறுமியருக்கான ரயில் இயக்கப்படுகிறது. மைதானம் அருகே ஸ்கேட்டிங் தளம், சிறுவர் பூங்கா உள்ளது.
அதனால், வ.உ.சி., பூங்கா பகுதிக்கு, மாலை நேரங்களில் பொதுமக்கள் குடும்பம் சகிதமாக வருகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் உயிரினங்களுக்கு, உரிய வசதி செய்து தரப்படவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, அதற்கான அங்கீகாரத்தை, மத்திய வன உயிரின ஆணையம் ரத்து செய்திருப்பதால், ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருக்கிறது. பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால், வ.உ.சி., உயிரியல் பூங்காவுக்கு நேற்று குழந்தைகளுடன் ஏராளமானோர் வந்தனர்.
குடும்பம் குடும்பமாக வந்து, நுழைவாயிலில் காத்திருந்தனர். அவர்களிடம், 'உயிரியல் பூங்காவை திறக்க மாட்டோம்; காத்திருக்க வேண்டாம்' என, ஊழியர்கள் கூறியதும், ஏமாற்றம் அடைந்தனர். அருகில் உள்ள, பூங்காவை சுற்றிப்பார்த்தனர். வ.உ.சி., உயிரியல் பூங்கா இயக்குனர் சரவணனிடம் கேட்ட போது, ''பறவைகள் பூங்காவாக மாற்ற, அதிகாரிகள் அளவில் ஆலோசனை நடந்து வருகிறது. இன்னும் திட்ட அறிக்கை தயாராகவில்லை,'' என்றார்.