போத்தனூர்:சுந்தராபுரத்திலிருந்து போத்தனூர் செல்லும் சாரதா மில் ரோட்டில், அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் பழைய நிலைக்கு வருகின்றன. மாநகராட்சி கமிஷனர் உறுதியளித்தபடி, ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அகற்ற வேண்டும்.
மழைநீர் வடிகாலின் மேற்பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள ஆக்கிரமிப்புகள், கடந்த வாரம் அகற்றப்பட்டன. அரசியல் கட்சியினரின் அழுத்தத்தால் பணி நிறுத்தப்பட்டது. இப்பணியை மேற்கொண்ட உதவி நகரமைப்பு அலுவலர், இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து, அப்போது கமிஷனர் பிரதாப்பிடம் கேட்டதற்கு, 'புதியதாக பதவி உயர்வு பெற்று வந்தவருக்கு பணியிடம் ஒதுக்க, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறியது நான்தான். இனி வரும் நாட்களில் இப்பணி தீவிரமாக நடக்கும்' என்றார்.
இந்நிலையில், உதவி நகரமைப்பு அலுவலர் மாற்றப்பட்டது ஆக்கிரமிப்பை அகற்றியவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, கடந்த இரு நாட்களாக அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள், மீண்டும் பழையபடி போடப்பட்டு வருகிறது. இது தொடர்ந்தால், கமிஷனரின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும். இதனை உதாரணமாக கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பிற இடங்களிலும், மீண்டும் ஆக்கிரமிப்பு துவங்கும்.
கமிஷனர் கூறியது போல் தீவிர நடவடிக்கையை உடனடியாக எடுத்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.