புதுடில்லி,-“புதுடில்லி துணை நிலை கவர்னருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது; ஆனால், அவர் சட்ட விதிமுறைகளை மீறி உத்தரவு பிறப்பித்து வருகிறார்,” என, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, துணை நிலை கவர்னராக பதவி வகிக்கும் வி.கே.சக்சேனாவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. அரசின் பல பரிந்துரைகளை கவர்னர் நிராகரித்து வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தலைமையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று கவர்னர் மாளிகையில் பேரணி நடத்தினர்.
பின், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
புதுடில்லி துணை நிலை கவர்னருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் கிடையாது. ஆனால், அவர் சட்ட விதிமுறைகளை மீறி உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், அரசின் பரிந்துரைகளை அரசியல் உள்நோக்கத்தோடு நிராகரிக்கிறார்.
புதுடில்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஐரோப்பிய நாடான பின்லாந்துக்கு பயிற்சிக்கு செல்லும் திட்டத்தை நிராகரித்துள்ளார். ஆனால், அந்தக் கோப்பு மீண்டும் அனுப்பி வைக்கப்படும்.
அதற்கு ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. துணைநிலை கவர்னர், மக்களின் அரசுக்கு தலைமை ஆசிரியர் அல்ல; இதை அவர் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.