குக்கரில் பொங்கல் வைத்த பலரும், பாரம்பரிய முறைக்கு மாறி, மீண்டும் மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். புதுப்பானையில் பொங்கல் வைப்பதுதான் வழக்கம். இதனால், பழைய பானையை அடுத்த போகியன்று உடைக்கின்றனர். சிலர் பயன்படுத்தாமல் அப்படியே விடுகின்றனர்.
பழைய பொங்கல் பானைகளை, பறவைகளின் தாகம் தீர்க்க பயன்படுத்தலாமே என்கிறார் இயற்கை ஆர்வலர் ஒருவர். பானைகளை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என, அவர் அளித்த ஆலோசனைகள் இதோ!
அழகழகாய் அலங்காரம்
பானைகளில் விதம், விதமான வண்ணங்களில் அழகிய ஓவியங்ளை தீட்டினால் அது, கலைப்பொருள் ஆகிவிடுகிறது.
உங்கள் கற்பனை மற்றும் கைவினை திறன் மூலம் பீட்ஸ், மணிகள், லேஸ் மற்றும் மிர்ரர் வொர்க் செய்து, இன்னும் ஸ்பெஷலாக மெருகேற்றலாம்.
கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் இதை, சிறந்த அலங்காரப் பொருளாக, அலுவலகம், வீடுகளில் வைக்கலாம்.
செடிகளுக்கு பாதுகாப்பு
பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பழைய மண் பானைகளை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம். பானைகள் பெரும்பாலான செடிகளுக்கு ஆரோக்கியமான சூழலை தருகிறது. இவை, தண்ணீர், ஈரப்பதத்தை தக்க வைத்து, காற்றையும் ஊடுருவ அனுமதிக்கிறது. வெப்பநிலை மாற்றத்திலிருந்து மண் பானைகள் செடிகளை பாதுகாக்கும்.
பறவைகளுக்கு வீடு
வீடுகளில் பறவைகளுக்கு கூடு அமைப்பதற்கு எல்லா வானிலைக்கும் ஏற்ற மண் பானைகளை பயன்படுத்தலாம். பானையின் வாய்ப்பகுதியை அடைத்து, பக்கவாட்டில் செல்லும்படி துளையிட்டு வையுங்கள்.
பாதுகாப்பாக இருப்பதை உணரும் குருவி, புல், குச்சி போன்ற பொருட்களை கொண்டு வந்து கூடு அமைக்கும். மொட்டை மாடி, தோட்டம் என மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைக்க வேண்டும். கயிற்றில் கட்டி தொங்கிய நிலையில் கூடு இருப்பதை, பறவைகள் அதிகம் விரும்பும்.
பறவைகளுக்கு தண்ணீர்
கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க விரும்புபவர்கள், பழைய மண் பானைகளை பயன்படுத்தலாம். சில்வர், பிளாஸ்டிக் பாத்திரங்களில் நீர் சீக்கிரமே சூடாகிவிடும். மண் பானையில், நீர் வெகு நேரம் குளிர்ச்சியாக இருக்கும்.
பானையின் வாய்ப்பகுதிக்கு கீழாக வெட்டி எடுத்து விட்டால், அடிப்பகுதி நன்கு அகலமாக இருக்கும். இதில், தண்ணீர் ஊற்றி வைக்கலாம். இது, உடல் சூட்டை தணித்துக்கெள்ள, பறவைகள் முங்கி எழுவதற்கும் வசதியாக இருக்கும்.