திருப்பூர்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும், இம்மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது.
கடந்தாண்டு பள்ளி, கல்லுாரி, பொதுப்பிரிவு மாணவர் மட்டுமே முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்று வந்த நிலையில், நடப்பாண்டு அரசு ஊழியர், மாற்றுத்திறனாளிகள் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவுக்கு - கபடி, சிலம்பம், தடகளம், பேட்மின்டன், வாலிபால் போட்டியும், பள்ளி மாணவ, மாணவியருக்கு, கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, பேட்மின்டன், கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ், வாலிபால் மற்றும் நீச்சல் போட்டியும், அரசு ஊழியர்களுக்கு கபடி, தடகளம், பேட்மின்டன், சதுரங்கம், வாலிபால் போட்டியும், மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., மற்றும், 100 மீ ஓட்டம், கபடி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனையர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, www.sdat.tn.gov.in இணையதள முகவரியில், பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 3,010 பேர் பதிவு செய்துள்ளனர். தனிநபர், குழுவுக்கான பதிவு செய்ய, 23ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.