பாலமேடு :உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் உக்கிரம் காட்டி வீரர்களை துவம்சம் செய்த காளைகளும்; துள்ளிக்குதித்து அடக்கி துாள்கிளப்பிய வீரர்களும் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
தைப் பொங்கலை முன்னிட்டு பாலமேடு பொது மகாலிங்கம் சுவாமி மடத்து கமிட்டி சார்பில் நடந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், ஐ.ஜி., அஸ்ரா கர்க், டி.ஐ.ஜி., பொன்னி, எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், பூமிநாதன், டி.ஆர்.ஓ., சக்திவேல், கமிட்டியினர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இப்போட்டியில் பங்கேற்க 905 காளைகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. 335 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஒரு வீரரையும், 16 காளைகளையும் தகுதி நீக்கம் செய்தனர். வீரர்கள் சீருடைகள் அணிந்து களம் இறங்கினர்.
காலை 7:40 மணிக்கு வாடிவாசல் வழியாக பொது மகாலிங்க சுவாமி கோயில், மஞ்சமலை, வடக்கு தெரு அய்யனார், நாயுடு தெரு பட்டாளம்மன், 24 மனை தெலுங்கு செட்டி உறவின்முறை சாத்தாவுராயன் காளியம்மன், மாரியம்மன் கோயில் தெரு பாலமுருகன், நாடார் தெரு பத்திரகாளியம்மன் கோயில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன.
பின் மதுரை, தேனி, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகள் களம் இறங்கின. 45 நிமிடங்களுக்கு ஒரு சுற்றும், ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 வீரர்கள் என களம் இறக்கிவிடப்பட்டனர். மொத்தம் 9 சுற்றுகளில் 889 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதிக மாடுகளை பிடித்த வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
உக்கிர பார்வையுடன் களத்தில் இறங்கிய பல காளைகள் வீரர்களை முட்டி துாக்கியெறிந்து துவம்சம் செய்தன. அதேநேரம் 'வந்துபார்...' என வீரர்களும் துள்ளிக் குதித்து திமிலை பிடித்து அடக்கி துாள் கிளப்பினர்.
பிடிபடாத காளைகளுக்கும், அடக்கிய வீரர்களுக்கும் தங்ககாசு, சைக்கிள், லேப்டாப், பீரோ, சேர், மிக்ஸி, பாத்திரங்கள் என வழங்கப்பட்டன. காளைகள் குத்தி வீரர்கள், பார்வையாளர்கள், நாகமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உட்பட 32 பேர் காயமடைந்தனர். மாலை 4:50 மணிக்கு நிறைவுற்றது.
காயமடைந்தவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க 160 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர்.பதினைந்து 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நின்றன. மருத்துவ பரிசோதனைக்கு பின் காளைகள் அனுமதிக்கப்பட்டன. முறையான ஆவணங்கள் இல்லாத காளைகள் போட்டிக்கு முன்பே வெளியேற்றப்பட்டன. காளைகள் விழுந்து விடாமல் இருக்க கிராமத்தில் உள்ள கிணறுகளை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.
எஸ்.பி.,க்கள் சிவபிரசாத் (மதுரை), பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன் உமேஸ் டோங்ரே (தேனி) மேற்பார்வையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., சுகிபிரேமா, தாசில்தார்கள் வீரபத்திரன், பாண்டிகீர்த்தி, நவ
நீதகிருஷ்ணன், பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதிபாண்டியராஜன், துணை தலைவர் ராம்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு துளிகள்
**வெளிநாட்டினர் பலரை சுற்றுலா வழிகாட்டிகள் அழைத்து வந்திருந்தனர். ஆனால் வெளிநாட்டினர் அமர முறையான இடம் ஒதுக்கப்
படவில்லை.
*9 காளைகளை அடக்கிய அனைத்து வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்கக்காசு பரிசு அளிக்கப்பட்டது.
* பனியன்களை மாற்றி ஆள் மாறாட்டம் செய்ய முயன்ற 10 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
*'பார்வையாளர் டோக்கன்' என்ற பெயரில் ரூ.500, ரூ.200 க்கு விற்பனை செய்து வசூலில் ஈடுபட்டவரை போலீசார் விசாரித்தனர்.
23 காளைகளை அடக்கிய தமிழரசன் முதலிடம்
இப்போட்டியில் சின்னப்பட்டியை சேர்ந்த கல்லுாரி மாணவர் தமிழரசன் 22, மொத்தம் 23 காளைகளை அடக்கி முதல் இடம் பெற்றார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.
அவர் கூறுகையில், "எனக்கு நேற்று முன்தினம் தான் மகன் பிறந்தான். ஜல்லிக்கட்டுக்கு போக வேண்டாம் என வீட்டில் தடுத்தனர். அண்ணன், மாமா அளித்த தைரியத்தால் பங்கேற்றேன். 5வது சுற்றில் அனுமதிக்கப்பட்டு 23 காளைகளை பிடித்தது எங்கள் குடும்பத்திற்கும், ஊருக்கும் பெருமை" என்றார்.
இவரையடுத்து 19 காளைகளை அடக்கிய பாலமேட்டை சேர்ந்த மணி 25, இரண்டாவது பரிசாக அமைச்சர் உதயநிதி சார்பில் 'பைக்' பெற்றார். பரிசுகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
கன்றுடன் பசு
பாலமேடு ரெங்கராஜபுரம் கார்த்திக்கின் 30, காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மானுாத்தை சேர்ந்த ரமேஷின் காளை இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டு கன்றுடன் பசு பரிசாக வழங்கப்பட்டது.