பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நகராட்சி அலுவலகம் முன், பல நாட்களாக குடிநீர் வீணாகி ரோட்டில் வழிந்தோடுகிறது.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன், பாலக்காடு ரோடு நான்கு வழிச்சாலையில், குடிநீர் வினியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வால்வு பகுதியில், குழாய் கசிவு ஏற்பட்டுள்ளது.
பல நாட்களாக குடிநீர் வீணாகி, ரோட்டில் வழிந்தோடி சாக்கடையில் கலக்கிறது. ரோட்டிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் ரோடும் சேதமடைந்து வருகிறது.
இதனால், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனத்தில் செல்பவர்களும் அவதிப்படுகின்றனர்.
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதும், அதை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாகி விட்டது.
பல பகுதியில் குடிநீர் வீணாவதை மக்கள் சுட்டிக்காட்டினாலும் சீரமைப்பு பணி மேற்கொள்வதில்லை. பத்திரிகையில் செய்தி வெளியான பிறகு, குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை அதிகாரிகள் நிதானமாக துவங்குகின்றனர்.
நகராட்சி அலுவலகம் முன், உயர் அதிகாரிகள் அனைவரின் பார்வைக்கும் தெரியும் வகையில் குழாயில் கசிவு ஏற்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகிறது.
இதைக்கூட சீரமைக்க நேரமின்றி, அதிகாரிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றுகிறார்கள் என, மக்கள் கேலி செய்கின்றனர்.
ரோட்டில் குடிநீர் வீணாவதை தடுத்தால், அது மக்களுக்கு பயன்படும் என்பதை அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
குடிநீர் சிக்கனத்தை வலியுறுத்தும் நிலையில், குடிநீர் வீணாவதையும் தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.