வால்பாறை:வால்பாறையில் போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டில் நடமாடும் கால்நடைகளை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.
சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரும் நகரங்களில் ஒன்றாக வால்பாறை உள்ளது. முக்கிய சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது. அங்கு சுற்றித்திரியும் கால்நடைகளால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
வால்பாறை நகரில் சமீப காலமாக, கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பொள்ளாச்சி ரோட்டில் ஆடு, மாடு, நாய் போன்றவை நடமாடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், ரோட்டில் உலா வரும் கால்நடைகளால், இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதனால், அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், இடையூறாக ரோட்டில் கால்நடைகளை அவிழ்த்து விடும், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். கால்நடைகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. எனவே, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.