உடுமலை:உடுமலை எஸ்.வி., புரத்தில் அகற்றப்பட்ட நிழற்கூரை, மீண்டும் அமைக்கப்படாததால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடுமலை - கொழுமம் ரோடு, எஸ்.வி., புரத்தில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை இருந்தது.
நகரை ஒட்டியுள்ள, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் கிராம ஊராட்சிகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் பஸ்களுக்காக, எஸ்.வி., புரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கின்றனர். அங்கிருந்த பஸ் ஸ்டாப் நிழற்கூரை பழுதடைந்து, ஆபத்தான நிலையில் இருந்தது.
இதனையடுத்து, பஸ் ஸ்டாப் நிழற்கூரை அகற்றப்பட்டது. ஆனால், புதிதாக நிழற்கூரை அமைக்காமல், பல ஆண்டுகளாக இழுபறியாகியுள்ளது.
இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
மக்கள் ரோட்டில் காத்திருக்கும் போதும், அதிவேகமாக வரும் வாகனங்களாலும், பஸ் ஸ்டாப் அடையாளம் இல்லாமல், தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களாலும் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, எஸ்.வி.,புரத்தில் புதிதாக பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.