காஞ்சிபுரம்,-பெண்ணை பலாத்காரம் செய்த இருவரை, துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் டிசம்பர் 11ம் தேதி இரவில் தனியாக நடந்து சென்ற 20 வயது பெண்ணை, இருவர் 'தாங்கள் போலீஸ்' என கூறி, அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்தார்.
தனிப்படை எஸ்.ஐ., ராஜா தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பெண்ணை பலாத்காரம் செய்த இருவரையும், ஜன., 13ம் தேதி ஸ்ரீபெரும்புதுார் அருகே போலீசார் கைது செய்தனர்.
இருவரும் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, சுண்ணாம்புகுளம் பகுதியை சேர்ந்த நாகராஜன், 31 மற்றும் பிரகாஷ், 31, என தெரிந்தது.
அவர்கள் சம்பவத்தன்று பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை, காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் தைலம் தோப்பில் மறைத்து வைத்துள்ளதாக கூறியுள்ளனர். போலீசார் அவர்களை 14ம் தேதி இரவு 9:00 மணியளவில் அந்த இடத்திற்கு அழைத்து சென்று தேடினர். இருசக்கர வாகனம் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது நாகராஜன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென போலீசாரை சுட்டு தப்பிக்க முயன்றார். அதில் போலீசார் காயமின்றி தப்பினர்.
உஷாரான போலீசார், நாகராஜன் தப்பி செல்ல முயற்சி செய்தபோது காலில் சுட்டனர். லேசான காயத்துடன் நாகராஜன் கீழே விழுந்தார். போலீசாரை தள்ளி விட்டு, பிரகாஷ் தப்பிக்கும் போது, அருகே இருந்த கால்வாயில் தடுமாறி விழுந்தார். அதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. மருத்துவமனை சிகிச்சைக்கு பின், இருவரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் போலியான 'வாக்கி டாக்கி' உள்ளிட்ட கருவிகளை வைத்து கொண்டு, தாங்கள் போலீசார் என கூறி, தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.