சென்னை,--பஞ்சாப் மாநில போலீசாரால் ஓராண்டாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 32. இவர் மீது பஞ்சாப் மாநிலம், லுாதியானா போலீசில், பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை தேடப்படும் குற்றவாளியாக, 2022ல் அந்த மாநில போலீசார் அறிவித்தனர்.
இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் 'இண்டிகோ' விமானத்தில் செல்வதற்காக, தினேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையம் வந்தார்.
அவரது ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர் தேடப்படும் குற்றவாளி என தெரிய வந்தது. அவரை பிடித்து வைத்தனர்.
பஞ்சாப் மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் வந்து தினேஷ்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.