
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
எம்ஜிஆர் வார்த்தையை வாழ்க்கையாக கொண்ட ரிக்சா மோகன்
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று எம்ஜிஆர்.,சொன்ன வார்த்தைக்காக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சைக்கிள் ரிக்சா ஒட்டி அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருபவர்தான் ரிக்சா மோகன்
புதுக்கோட்டைக்காரரான ரிக்சா மோகன் எம்ஜிஆர் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து அங்கு இருந்தவர்களிடம் இனிப்பை பகிர்ந்து கொண்டவர் நம்மிடம் எம்ஜிஆர்.,பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இப்போது 67 வயதாகும் மோகன் எட்டாவது வயது வரை படித்துள்ளார் அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்காமல் சிறு சிறு வேலைகளுக்கு சென்றவர் பதினெட்டு வயதில் சைக்கிள் ரிக்சா ஒட்ட ஆரம்பித்தார்.
வாடகைக்கு சைக்கிள் ரிக்சா எடுத்து ஒட்டி அதில் கிடைத்த வருமானத்தில் குடும்பம் நடத்திவந்தார் இவருக்கு மணைவி ஒரு மகன் உண்டு.
எதிர்பாரதவிதமாக இறந்து போன உறவினர் குழந்தைகளை பராமரிப்பது உள்ளீட்ட கூடுதல் குடும்ப பாரங்களையும் சைக்கிள் ரிக்சாவுடன் சேர்த்து இழுத்துவருகிறார்.
இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவிலும் இவருக்கு இருந்த ஒரே சந்தோஷம் எம்ஜிஆர் படங்கள் மட்டுமே
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எம்ஜிஆர் படங்கள் பார்த்து சந்தோஷம் கொள்வார் ஒரே படத்தை கணக்கு வழக்கு இல்லாமலும் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
எம்ஜிஆரின் புதுப்படங்கள் எதுவும் புதுக்கோட்டையில் அப்போது ரீலீஸ் ஆகாது காரைக்குடியில்தான் ரிலீஸாகும் இதற்காக சுமார் நாற்பது கிலோமீட்டர் துாரம் நடந்து சென்று காரைக்குடியில் எம்ஜிஆர் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டு திரும்புவார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் காரணமாக வந்திருந்த எம்ஜிஆரை பார்க்க விடிய விடிய மைதானத்தில் படுத்திருந்து அவரை பக்கத்தில் போய் பார்த்து கைகொடுத்திருக்கிறார் அவர் கைதொட்ட அந்த நொடி முதல் அவரே இவரது தலைவராகவும் இதயதெய்வமாகவும் ஆகிவிட்டார் ஆம் அதுவரை ரசிகராக இருந்தவர் எம்ஜிஆர் புகழ் பரப்பும் தொண்டராகாவும் மாறிவிட்டார்.
எப்போதும் அதிமுக கரை கொண்ட வேட்டி சட்டை துண்டுடன்தான் காணப்படுவார் ரிக்சாவில் ஏறக்கூடியவர்கள் எம்ஜிஆர் பெயரைச் சொன்னால் போதும் அவர்கள் கொடுத்த காசை வாங்கிக் கொள்வார் அல்லது காசே வாங்கிக்கொள்ளமாட்டார் முதியவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசம் என்று தன்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்வார்.
ஆனாலும் இவரால் பதினைந்தாயிரம் ரூபாய் செலவழித்து சொந்தமாக ரிக்சா வாங்கமுடியாமலே இருந்தது சுமார் முப்பது வருடமாக வாடகை சைக்கிள் ரிக்சா ஓட்டிவந்தார் இவரது நிலை அறிந்து புதுக்கோட்டைக்கு முதல்வராக வந்திருந்த ஜெயலலிதா இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்
அந்தப் பணத்தில் பத்தாயிரம் ரூபாயை உறவினர் குழந்தைகள் படிப்பிற்கு செலவழித்தவர் மீதம் உள்ள பதினைந்தாயிரத்தை எடுத்துக் கொண்டு மதுரைக்கு போய் சைக்கிள் ரிக்சா வாங்கிக் கொண்டு அங்கு இருந்து புதுக்கோட்டைக்கு ஒட்டியபடி வந்துவிட்டார்
எம்ஜிஆர் இறந்த பிறகு அவரது சிலைக்கு அன்றாடம் மாலை அணிவித்து வந்தார் பிறந்த நாளின் போது தன்னால் இயன்றவரை இனிப்பு வழங்கி மகிழ்வார்.
எம்ஜிஆர்.,பக்தராகவே மாறிவிட்ட மோகன் வீட்டில் எம்ஜிஆர் படத்தை வணங்கிவிட்டுதான் இப்போதும் வெளியே கிளம்புவார் அவரது ரிக்சாவில் எம்ஜிஆர் படங்களை நிறயை ஒட்டிவைத்துள்ளார் இந்தப்படம் கொஞ்சம் மங்கினால் கூட உடனே செலவழித்து புதுப்படம் வாங்கிஒட்டிவிடுவார்.

இன்றைய வேகமான கால ஒட்டத்திற்கு இவரது சைக்கிள் ரிக்சா எடுபடவில்லை மக்கள் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர ஏறிச்செல்ல விரும்புவதில்லை பள்ளிக்குழந்தைகள் மட்டும் இவரது ரிக்சாவில் பயணிக்கின்றனர் இதன் மூலம் வரும் 3 ஆயிரம் மாதவருமானமும்,முதியோர் உதவித்தொகையாக வரும் ஆயிரம் ரூபாயும் சேர்த்து கிடைக்கக்கூடிய 4 ஆயிரம் ரூபாய் வருமானத்தில் வாழ்க்கை ஒடிக்கொண்டு இருக்கிறது.
ஒரே மகனுக்கு இதய நோய் இதற்காக சொந்த வீட்டை விற்று சிகிச்சை செய்ததில் நோய் தீர்ந்தபாடில்லை ஆனால் மோகன் வாடகை வீட்டுக்காரராகிவிட்டார்.
இந்நாளில் வேர்வை சிந்தாதவன் பின்னாளில் கண்ணீர் சிந்துவான் என்று என் இதய தெய்வம் புரட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார் (இவர் எப்போது எங்கே பேசினாலும் எம்ஜிஆர் பெயரைச் சொல்லமாட்டார் இதய தெய்வம் என்றே சொல்பவர்) ஆகவே என்னால் முடிந்தவரை சைக்கிள் ரிக்சாவை ஒட்டி உழைப்பேன் என்கிறார்.
ஆனால் வருடக்கணக்கில் ஒடியதில் நானும் தேய்ந்துவிட்டேன் என் ரிக்சாவும் தேய்ந்துவிட்டது எல்லோரும் ஆட்டோவிற்கு மாறிவிட்டனர் நீயும் மாறவேண்டியதுதானே என்கின்றனர் என் ரிக்சாவிற்கு மோட்டார் பொருத்தவே முடியாத நான் எங்கே ஆட்டோவிற்கு மாறுவது அவ்வளவு ஏன் தேய்ந்து போன சைக்கிள் ரிக்சா பாகங்களை மாற்ற 6 ஆயிரம் ரூபாய் தேவை அதற்கே சிரமப்படுகிறேன் ஆனால் யாரிடமும் கேட்கமாட்டேன் அது என் இதய தெய்வத்திற்கு பிடிக்காது என்ற இவரது அவலக்குரல் புதுக்கோட்டை ஜோமன் அறக்கட்டளை தலைவர் டெய்சி ராணிக்கு எட்டிவிட்டது உடனடியாக அவரது தேவையான 6 ஆயிரம் ரூபாயை வழங்கி உதவியிருக்கிறார்.

கட்சிக்காரர்கள் என்றில்லை எம்ஜிஆரை நேசிக்கும் நல்ல நிலையில் உள்ளவர்கள் ரிக்சா மோகனின் கண்ணீரை துடைத்தால் அது எம்ஜிஆருக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும்.அவரது போன் எண்: 96555 80654
இவரைப்பற்றி தகவல் தந்து உதவிய கோவை ஈரநெஞ்சம் மகேந்திரனுக்கு நன்றி
-எல்.முருகராஜ்