'அரசியலுக்கு வந்தாகி விட்டது; இனி, அதிலிருந்து பின்வாங்கினால் நன்றாக இருக்குமா...' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார், காங்கிரஸ் லோக்சபா எம்.பி.,யான சசி தரூர்.
இவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையில், உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின், அரசியலுக்கு வந்தவர்; மன்மோகன் சிங் தலைமையிலான, காங்., அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்.
கடந்தாண்டு நடந்த, காங்., தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கேயை எதிர்த்து போட்டியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார், தரூர். 'அறிவுஜீவி' என்ற அடையாளத்துடன் வலம் வந்ததால், காங்கிரசில் உள்ள சிலர், இவரை உசுப்பேற்றி, தேர்தலில் நிற்க வைத்தனர்.
ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றார், மல்லிகார்ஜுன கார்கே. இதன்பின், டில்லி அரசியலில் இருந்து படிப்படியாக ஓரம் கட்டப்பட்ட தரூருடன், இப்போது, காங்., தலைவர்கள் யாரும் பேசுவது கூட இல்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், சமீப காலமாக தன் சொந்த மாநிலமான, கேரளாவுக்கு அடிக்கடி வருகிறார்; அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கேரள காங்கிரசில் உள்ள, மற்ற மூத்த தலைவர்கள் இதனால் கடுப்பாகி, அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 'அடுத்த சட்டசபை தேர்தலில், காங்கிரசின் முதல்வர் வேட்பாளராகலாம் என, நினைக்கிறார் போலிருக்கிறது. டில்லியில் ஓரம் கட்டப்பட்டதால், கேரளாவுக்கு வந்துள்ளார்...' என, கிண்டல் அடிக்கின்றனர். இதனால் கவலை அடைந்துள்ள சசி தரூர், 'டில்லியில் தங்கி, தேசிய அரசியலும் செய்ய முடியவில்லை; கேரளாவில் தங்கி, மாநில அரசியலும் செய்ய முடியவில்லை. நமக்கு இந்த அரசியல் தேவையா...' என, புலம்புகிறார்.