கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ராமாயணம் ஒரு கட்டுக் கதை' என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் பேசியுள்ளனர். முதல்வர் ஸ்டாலினும், அவர்களின் பேச்சை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளார். ராமாயணம் கட்டுக் கதை என்றால், 'பைபிள், குரான்' எல்லாம் நடந்த உண்மை என, எப்படி நம்புகின்றனர், தி.மு.க.,வினர்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஹிந்து மதத்தை, ஹிந்துக்களை இழிவுபடுத்த வேண்டும், சிறுமைப்படுத்த வேண்டும் என்பதே, ஸ்டாலின் மற்றும் தி.மு.க.,வினரின் நோக்கம். இந்த விஷயத்தில் கருணாநிதி, ஸ்டாலின் என, இருவரின் பாதையும் ஒன்று தான்.
மக்களின் பிரச்னைகளை தீர்க்க முடியாமல், தி.மு.க., தோல்வியை தழுவும் போதெல்லாம், அக்கட்சியினர் ஹிந்து விரோத பேச்சை துவக்கி, அரசியல் களத்தை திசை திருப்புவது வழக்கமாக உள்ளது. ராமாயணம் ஒரு கட்டுக் கதை என்று விமர்சித்தது போல, தி.மு.க.,வில் யாராவது, குரான், பைபிள் எல்லாம் கட்டுக் கதை என்று சொன்னால், அவர்கள், தி.மு.க.,வில் இருக்க முடியுமா... இல்லை வெளியில் தான் நடமாட முடியுமா?
உடனடியாக கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் கொந்தளித்து, தெருவில் இறங்கி போராடுவர்; தி.மு.க.,வை ஆட்சியிலிருந்து துாக்கி எறியும் வரை, அவர்களின் போராட்டம் ஓய்ந்திருக்காது.
தி.மு.க.,வினரின் பகுத்தறிவு, மதசார்பின்மை கோஷங்கள் எல்லாமே, ஹிந்துக்களுக்காக சொல்லப்படுபவை.
கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற உதயநிதி, 'என் மனைவி கிறிஸ்துவர் என்பதால், நானும் ஒரு கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்' என்றார். இதேபோல, தி.மு.க., தலைவர்களில் யாராவது, 'நான் ஹிந்து என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்...' என்று பேச முடியுமா?
தி.மு.க.,வினரை பொறுத்தமட்டில், ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்படுவதே மதசார்பின்மை; ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் அரசே மதசார்பற்ற அரசு. இது தான், திராவிட மாடல் அரசின் 'பார்முலா!'
மோடி அதிரடியால் பரிதவிக்கும் பாக்.,
விஜயராகவன்
சுவாமியப்பன், கஞ்சபள்ளி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: அண்டை நாடான பாகிஸ்தான், சில வாரங்களாக கடும் நிதி நெருக்கடியில்
சிக்கித் தவித்து வருகிறது. அந்நாட்டு மக்கள், அத்தியாவசிய
பொருட்களுக்கும், உணவுக்கும் கடும் சிரமப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம்
உள்ளன.
இந்தப் பிரச்னைக்கான மூல காரணம் என்ன என்று ஆராய்ந்து
பார்த்தால், மோடி தலைமையிலான மத்திய அரசு, ௨௦௧௬ல் அறிவித்த பண மதிப்பிழப்பு
நடவடிக்கையே என்பது தெரியவரும்.
உலகில் உள்ள நாடுகள், தங்கள்
மக்களின் உழைப்பு மற்றும் உற்பத்தி பொருட்கள் சார்ந்து, தங்களின்
பொருளாதாரத்தை கட்டமைத்தன; ஆனால், பாகிஸ்தான் மட்டும், நம் நாட்டின்
பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை சீரழிப்பதை தொழிலாகக் கொண்டு செயல்பட்டு
வந்தது.
நம் நாட்டின் ரூபாய் நோட்டுகள் போன்ற போலிகளை தயார் செய்து,
அவற்றை பல்வேறு சேனல்கள் வழியாக இங்கு ஊடுருவச் செய்து, பொருளாதாரத்தை
சீர்குலைக்கும் சதி வேலையில் ஈடுபட்டது.
அதற்கெல்லாம், மோடியின் பண
மதிப்பிழப்பு நடவடிக்கை, 'ஆப்பு' வைத்து விட்டது. அதனால் தான், 'மோடி அரசு
அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்' என, உச்ச நீதிமன்றமே
தீர்ப்பளித்து உள்ளது.
பிரதமர் மோடி என்ற சரியான ஆளுமையின் கீழ்
நம் நாடு வந்ததால், தன் பொருளாதாரத்தை காக்க இயலாமல், பாகிஸ்தான் தவித்து
வருகிறது; இது, பாகிஸ்தானின் மோசடி செயல்களுக்கு ஆண்டவன் வழங்கியுள்ள
தீர்ப்பு.
அதே நேரத்தில், ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதில் நிகழ்ந்த
முறைகேடு தொடர்பான, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரத்திற்கு
எதிராக வழக்கின் விசாரணை, சி.பி.ஐ., வாயிலாக மீண்டும் சூடு பிடிக்கத்
துவங்கியுள்ளது.
இந்த விசாரணை வேகமெடுக்கும் போது, காங்கிரஸ்
ஆட்சியில் நடந்த பல தில்லாலங்கடிகள் வெளிவரலாம் என்பதே, மக்களின்
எதிர்பார்ப்பு. இந்தியர்கள் அனைவரும், அந்த நாளை எதிர்பார்த்துக்
காத்திருக்கின்றனர்.
ராமனை பற்றி பேச அருகதை கிடையாது!
ரா.கோசலை
செல்வி, ராமேஸ்வரத்தில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: சேது
சமுத்திர திட்டம் தொடர்பாக, சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., நாகை மாலி, 'ராமர் கற்பனை படைப்பு;
அந்த கற்பனை படைப்பால், சேது சமுத்திர திட்டத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது'
என்று கூறியுள்ளார்.
'வேளாங்கண்ணி மாதா கற்பனை படைப்பு; அந்த
தேவாலயம் உள்ள இடத்தில் துறைமுகம் கட்டினால், பல மீனவர்களின் வாழ்வாதாரம்
மேம்படும்' என்று இவர் பேசியிருந்தால், கண்டிப்பாக ஊர் திரும்பி இருக்க
மாட்டார். அந்த அளவுக்கு கிறிஸ்துவர்கள் இவரை, உண்டு, இல்லை என
ஆக்கியிருப்பர்.
மீனவ குலத்தில் பிறந்த படகோட்டியான, குகன் கொடுத்த
அசைவ உணவான, மீன் துண்டுகளை, 'ஏற்றுக் கொண்டோம்' என்ற வார்த்தையின்
வாயிலாக, தன் தமையனாக்கி, சம நீதியை உலகிற்கு உணர்த்தியவர் ராமபிரான்.
இன்று,
தேர்தலில் போட்டியிட ஜாதி வாரியாக, 'சீட்' கொடுப்பதில் இருந்து, அரசியல்
லாபத்திற்காக, தேசிய தலைவர்களையும் ஜாதி, மத ரீதியாக சித்தரித்து
கொண்டாடும் நிலைமை உள்ளது.
சீதையின் கற்பை பரிசோதிக்க மட்டுமே,
அவளை தீக்குளிக்க சொல்லவில்லை ராமன். ராவணனின் ஒழுக்க நெறியையும்
பறைசாற்றவே அந்த நிகழ்வை செய்தார் என்கிறது புராணம்.
தன்
எதிரியையும் பெருமைப்படுத்தும், ராமபிரானின் போக்கோடு ஆராய்ந்தால்,
ஓட்டளித்த மக்கள் உட்பட அனைவரையும், தரங்கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை
செய்யும், தி.மு.க., ஆட்சியாளர்களுக்கு, ராமபிரான் கற்பனை படைப்பாகவே
தெரிவார்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முற்பட்ட பகுதி, வங்கக் கடலில் ஆழம் குறைந்த பகுதி.
அங்கு
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினாலும், கடலுக்கு அடியில்
அடிக்கடி மண் சரிந்தபடியே இருக்கும்; அவற்றை தொடர்ந்து அள்ள வேண்டியது
நேரிடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து; அதனால், அந்தத் திட்டம்
சாத்தியப்படாத திட்டம் என்பதே உண்மை நிலவரம்.
அந்த உண்மையை மறைத்து,
தங்களின் சுயலாபத்திற்காக, ராமபிரானை அவதுாறாக பேசுகின்றனர், ஆளுங்
கட்சியினர் மற்றும் அவர்களுக்கு துதிபாடி வரும் கூட்டணி கட்சியினர்.
தன்
தந்தை கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக, அரியணையை துறந்து வனவாசம்
சென்றவர் ராமபிரான். ஆனால், ஜனநாயக ஆட்சியையே குடும்ப ஆட்சியாக்கி
குதுாகலித்து வருபவர்கள், திராவிட செம்மல்கள். இவர்களுக்கு, ராமனை பற்றி
பேச அருகதையே கிடையாது.