''உத்தரகண்ட் ஜோஷிமத் மாதிரி நிலச்சரிவு நடந்துடுமோன்னு பயப்படுறாங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டத்துல தானே சொல்றீர் ஓய்...'' என, பட்டென கேட்டார் குப்பண்ணா.
''ஆமா... இந்த மாவட்டத்துல, நிலச்சரிவு அபாயம் அதிகம் இருக்கிற, குன்னுார் காட்டேரி, சேலாஸ் சாலையோரத்துல, வெளிமாவட்ட, தி.மு.க., புள்ளிகள் பலர், தனியார் இடங்களை வளைச்சு போடுறாங்க... 'விவசாய பணிக்கு'ன்னு அனுமதி வாங்கிட்டு, அங்க இருக்கிற மரங்கள், செடி, கொடிகளை வெட்டி தள்ளுறாங்க...
''அப்புறமா மலையை குடைஞ்சு, வீட்டு மனைகளா மாத்தி வித்துட்டு இருக்காங்க... இதுக்கான அனுமதியை, சென்னையில உள்ளாட்சி துறையில இருந்து நேரடியா வாங்கிட்டு வந்துடுறதால, உள்ளூர் அதிகாரிகளால எதுவும் செய்ய முடியுறது இல்லைங்க...
''மலையை குடையுறதை கண்டுக்காம இருந்தா, 'உத்தரகண்ட் அபாயம் இங்கயும் நடந்துடும்'னு உள்ளூர் மக்கள் கவலைப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கேரளாவுல கோஷ்டி தலைவர்களை ஒருங்கிணைச்சிட்டாரு வே...'' என, அடுத்த தகவலை பேச ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''காங்., தகவலா பா...'' என, கற்பூரமாக கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... கேரளாவின் பிரதான எதிர்க்கட்சியான, காங்கிரஸ்ல, தமிழகத்தை விட கோஷ்டி கள் அதிகம் இருக்கு... ஆளுக்கொரு பக்கமா அரசியல் பண்ணிட்டு இருப்பாவ வே...
''அந்த மாநில, காங்., மேலிட பொறுப்பாளரா நம்ம ஊர், 'மாஜி' எம்.பி., விஸ்வநாதன் தான் இருக்காரு... இவர் கடும் முயற்சிகள் எடுத்து, கோஷ்டி தலைவர்களை ஒருங்கிணைச்சிருக்காரு வே...
''மறைந்த முன்னாள், முதல்வர் கருணாகரன் பெயர்ல, திருவனந்தபுரத்துல இருக்கிற கட்சியின் மாநில தலைமை அலுவலகத்துல, புது கட்டடம் கட்ட, சமீபத்துல பூமி பூஜை போட்டிருக்காவ... இதுல, மாநில காங்., தலைவர் சுதாகரன், மற்ற மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ரமேஷ் சென்னிதாலா, தாரிக் அன்வர்னு எல்லாரும் கலந்துக்கிட்டாவ வே...
''அதோட, 'இதே ஒற்றுமையோட கட்சி பணிகளை செஞ்சு, வர்ற லோக்சபா தேர்தல்ல, ராகுலின் வயநாடு உட்பட, 20 எம்.பி., தொகுதிகள்லயும் காங்கிரசை ஜெயிக்க வைக்கணும்'னு எல்லாரும் உறுதிமொழி எடுத்திருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''நம்ம ஊர் காங்கிரஸ் கோஷ்டிகளையும் ஒண்ணு சேர்க்க, விஸ்வநாதன் மாதிரி ஒருத்தர் வந்தா, நன்னா இருக்குமே...'' என சிரித்த குப்பண்ணாவே, ''கவர்னர் அலுவலக அதிகாரிகள், தர்மசங்கடத்துல தவிக்கறா ஓய்...'' என்றார்.
''அவங்களுக்கு என்னங்க பிரச்னை...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''முதல்வர் ஸ்டாலின் - கவர்னர் ரவி மோதல் நாளுக்கு நாள் பெரிசாகிட்டே போறதோல்லியோ... கிண்டி கவர்னர் மாளிகையில பணியில இருக்கற அதிகாரிகள், ஊழியர்களிடம், 'அங்க என்ன நடக்கறது'ன்னு தமிழக அரசு சார்புல விசாரிக்கறாளாம் ஓய்...
''அங்க நடக்கற விஷயங்களை இங்க சொன்னா, கவர்னரின் கோபத்துக்கு ஆளாகணும்... சொல்லாம போனா, தமிழக அரசின் அதிருப்திக்கு ஆளாகணும்கறதால, அதிகாரிகள், ஊழியர்கள் சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம தவிக்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''இதைத்தான், 'மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி'ன்னு சொல்லுவா வே...'' என்ற படியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.