கவலையிலிருந்து விடுபட்டுவாழத் தொடங்குவது எப்படி?
ஆசிரியர்: டேல் கார்னகி/சிவமுருகேசன்
பக்கம்: 324, விலை: ரூ.300
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
பழைய தோல்விகளையும் இயலாமைகளையும் நினைத்து வெறுப்படைவது; எதிர்கால முரண்களை கற்பனை செய்து, நிகழ்காலத்தை தவற விடுவதுதான் பயத்தின் பிறப்பிடம். பயம் தந்தை என்றால், திகில் தாயாகி கவலையை பிரசவிக்கும். கவலை மனிதனைத் தின்னும் மாயப்பிசாசு. அதைக் கொள்ள, 'வேளையில் மூழ்கு; வேதனையில் மூழ்க மாட்டாய்' உள்ளிட்ட தீர்வுகளைச் சொல்லும் நுால்.
நித்தம் சிரித்து யுத்தம் செய்யடி
ஆசிரியர்: ஜெ.விஜயாராணி ஐ.ஏ.எஸ்.,
பக்கம்: 176, விலை: ரூ.250
வெளியீடு: வசந்தா பதிப்பகம்
ஐந்து சிறுகதைகளின் தொகுப்பாக இந்நுால் வெளிவந்திருக்கிறது. திருமண உறவில் விரிசல் வந்தால், அது பெண்ணின் தொடர் வாழ்க்கையில், தொழில் வளர்ச்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது, சிறுகதைகளின் ஆழ்கருத்தாக இருக்கிறது. இக்கதைகளில் இடம்பெறும் பெண்களை போல, நம்மை சுற்றியும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கான வரவேற்பு கொடுக்கிறோமா என்ற கேள்வி, நம்மில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
அப்பாவின் காதலி
ஆசிரியர்: க.வீரமணி
பக்கம்: 144, விலை: ரூ.180
வெளியீடு: கவி ஓவியா
இந்த தொகுப்பில் உள்ள 22 சிறுகதைகளும், இணையத்தில் வெளியாகி வாசகர்களைக் கவர்ந்தவை. தற்போது நுால் வடிவாகி உள்ளது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் பெண்ணை அடிப்படையாக வைத்து, அவர்களின் உணர்வுகளை மதித்து, நாசுக்காக, தெளிவான எழுத்து நடையில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.
ஒரு தமிழரின் அமெரிக்க -கனடா பயண அனுபவங்கள்
ஆசிரியர்: ராமசுவாமி
பக்கம்: 290, விலை: ரூ.400
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
நுாலாசிரியரும் அவர் மனைவியும் அமெரிக்கா சென்ற அனுபவங்கள், பார்த்து, ரசித்த இடங்கள், சுவையான சம்பவங்களை கோர்த்திருக்கிறார். நியூயார்க், ஐ.நா., சபை, நயாகரா, வாஷிங்டன், டிஷ்னிலாண்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட இடங்கள் பற்றியும் குழந்தை வளர்ப்பு முதல் முதியோர் பாதுகாப்பு வரை அவர் பார்த்து வியந்த விஷயங்கள் உள்ளன.
படித்திருக்கிறீர்களா? (தொகுதி -- 1)
ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்
பக்கம்: 146, விலை: ரூ.170
வெளியீடு: அழிசி
க.நா.சுப்ரமண்யம் 'சுதேசமித்திரன்' வாரப் பதிப்பில் எழுதிய நுால் அறிமுகக் கட்டுரைகளின் முதல் தொகுதி இது. இந்தப் பரிந்துரை பட்டியலை ஒட்டி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழில் ஆதரவும் எதிர்ப்புமாக விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழில், ஒரு மூலநுால் தொகை ஒன்றை உருவாக்கும் முயற்சி. நவீனத் தமிழிலக்கியத்தின் மையத்தொகுதி என, தற்போது அழைக்கப்படுகிறது.