சென்னை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில், மக்கள் அதிகம் கூடும் கடற்கரை பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் நேற்று செய்யப்பட்டிருந்தன.
அதன்படி, மெரினா கடற்கரையில் கூடுதலாக 103 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு, 45 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், சேகரமாகும் குப்பையை உடனுக்குடன் எடுத்து செல்ல ஒரு 'காம்பேக்டர்' வாகனமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், 50 குப்பை தொட்டிகளும், 20 பணியாளர்களும், பாலவாக்கம் கடற்கரையில், 15 பணியாளர்கள், இரண்டு பேட்டரி வாகனங்கள், ஒரு டிராக்டர், ஒரு மெக்கானிக்கல் ஸ்வீப்பர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
நீலாங்கரை கடற்கரையில், ஒவ்வொரு வேலை நேரத்திலும் சுழற்சி முறையில் கூடுதலாக ஆறு துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று காலை முதலே பலர் கடற்கரைக்கு படையெடுக்க துவங்கினர்.
இதில், பொதுமக்கள் பயன்படுத்தி துாக்கி எறிந்த குப்பையை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் உடனடியாக அகற்றினர்.
இப்பணிகளை, மெரினா, பெசன்ட் நகர், அக்கரை, நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று நேரில் ஆய்வு செய்து, துாய்மை பணிகளை விரைவுப்படுத்தினார்.
அதன்படி, நேற்று மாலை வரை, கடற்கரை பகுதிகளில் மட்டும், 500 கிலோவுக்கு மேல் குப்பை அகற்றப்பட்டன. தொடர்ந்து, கடற்கரை துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.