ராயப்பேட்டை,ராயப்பேட்டையில் போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராயப்பேட்டைப் பகுதி வெஸ்ட் காட் சாலை, போக்குவரத்து முக்கியத்துவம் உள்ள, பரபரப்பான சாலையாக உள்ளது. இந்த சாலையை நாள்தோறும், ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில், ராயப்பேட்டை மருத்துவமனை, திரையரங்கம், பல்வேறு வகை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
தற்போது இந்த சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன.
இந்தப் பணிகள் ஒருபுறம் இருந்தாலும், சாலையை ஆக்கிரமித்து அணிவகுத்து நிற்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களால், போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்த சாலையில் போக்குவரத்து பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனை அமைந்துள்ள, இந்த சாலையை, ஆம்புலன்ஸ்கள் கடந்து வருவது மிகவும் கடினமான காரியம்.
இந்த போக்குவரத்து நெரிசல் விவகாரத்தில், மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள், பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்னைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.