நெற்குன்றம், நெற்குன்றத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் முடிந்த நிலையில், அவற்றில் குடிநீர் ஏற்றி சோதனை செய்து, வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை நெற்குன்றம் ஊராட்சியாக இருந்த போது, கடந்த 2010ல் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், 19 கோடி ரூபாய் செலவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து 2012ல், சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட மண்டலமான வளசரவாக்கத்தில் நெற்குன்றம் இணைக்கப்பட்டது.
இதையடுத்து, 148வது வார்டு கங்கையம்மன் கோவில் குளம், லட்சுமி நகர் மற்றும் 145வது வார்டு மாதா கோவில் தெருவிலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.
இந்நிலையில், 2017ல் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு காரணங்களால், பணிகளை தொடர முடியாது என, ஒப்பந்ததாரர்கள் முரண்டு பிடித்ததையடுத்து, கட்டுமான பணிகள் தடைபட்டன. மீண்டும் 2018ம் ஆண்டு, 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் தொடரப்பட்டன.
இதில், 145வது வார்டில் மாதா கோவில் தெருவில் கட்டப்பட்டு வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.
இதற்கு, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக செல்லும் செம்பரம்பாக்கம் குடிநீர் குழாயில் இருந்து இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்ய தயாராக உள்ளது.
ஆனால், 148வது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் முடிந்த நிலையில், 11 ஆண்டுகளாக ஜவ்வு போன்று இழுத்து கிடப்பில் இருந்தது.
இதில், கங்கையம்மன் கோவில் குளத்தில் கட்டப்பட்டு வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளும், சமீபத்தில் முடிக்கப்பட்டன. இருந்தும், இந்த தொட்டிகளில் குடிநீர் ஏற்றி சோதனை செய்யும் பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.
இதுகுறித்து நம் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. 'இந்த மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டே 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முதற்கட்டமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும்' என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புது சிக்கல்
நெற்குன்றத்தில் 1,000 மீட்டர் துாரத்திற்கு பிரதான குழாய் என, 66.58 கி.மீ., துாரத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இதில், 62 கி.மீ., துாரத்திற்கு, கடந்த 2017ல் குழாய் பதிக்கப்பட்டது.
தற்போது, மழையால் நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், இரு வார்டுகளிலும் நடந்து வருகின்றன. இதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்ட போது, பெரும்பாலான குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன.
இதை சரி செய்ய, பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில், குடிநீர் 'பம்பு' செய்து சரிபார்க்க வேண்டும். அத்துடன், குடிநீர் கசியும் பகுதிகளை கண்டறிந்து, உடைந்த குடிநீர் குழாயை சீர் செய்ய வேண்டும்.
இதை குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக சீர் செய்யவில்லை என்றால், பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சாலை அமைந்த பின், குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, சாலையை மீண்டும் தோண்ட வேண்டிய நிலை ஏற்படும்.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நெற்குன்றத்தில் மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் முடிக்கப்பட்டு, அவற்றில் குடிநீர் ஏற்றி, சோதனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்' என்றனர்.
148 வது வார்டு அ.ம.மு.க., கவுன்சிலர் கிரிதரன் கூறியதாவது:
நெற்குன்றத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் 11 ஆண்டுகளாக முடங்கியுள்ளன. லாரிகள் பற்றாக்குறை மற்றும் பாதாள சாக்கடை பணியால் சாலை மோசமாக உள்ளதால், குடிநீர் லாரிகள் பல தெருக்களுக்கு செல்வதில்லை.
இதனால், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் நிலவுகிறது. குடிநீர் குழாய் மற்றும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை முடித்து, வீட்டு இணைப்பு வழங்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்த பல காலக்கெடுவை தவற விட்டுள்ளனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் முடிந்த நிலையில், கட்ந்த மூன்று மாதங்களாக அவற்றில் தண்ணீர் ஏற்றி, சரி செய்வதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
ஆனால், இன்னும் எந்த பணியும் நடக்கவில்லை. மேலும், சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உள்ள உடைப்புகளையும் ஆய்வு செய்ய, அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.