மாமல்லபுரம் மாமல்லபுரத்தில், காணும் பொங்கலான நேற்று, பயணியர், காலை 9:00 மணியிலிருந்தே வரத் துவங்கினர். அரசு, சுற்றுலா பேருந்துகள், கார், வேன், இருசக்கர வாகனங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்தனர்.
அரசுப் பேருந்துகள் புறவழி சந்திப்பில் நிறுத்தப்பட்டன. சுற்றுலா பேருந்துகளை, போலீசார் நகருக்குள் அனுமதிக்காமல், கார், இருசக்கர வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர்.
புறவழி சந்திப்பு, பூஞ்சேரி சந்திப்பு பகுதிகளிலிருந்து, பேருந்து நிலைய பகுதிக்கு, மாநகர் சிற்றுந்துகள் இயங்கின. பயணியர், தலா 10 ரூபாய் கட்டணத்தில் சென்றனர்.
கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள், கடற்கரை பகுதிகளில், குடும்பத்தினர், நண்பர்கள், காதலர்கள் என, பயணியர் அலைமோதினர். கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர்.
கைவினைப் பொருட்கள், உணவகம், குளிர்பானம், தேநீர், நொறுக்குத் தீனி கடைகளில், வியாபாரம் களைகட்டியது.