சென்னை, நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியிடுவது யார் என்பதில், சி.எம்.டி.ஏ.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டப்படி, சர்வே எண் வாரியாக நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்படி குடியிருப்பு, தொழில், வணிகம், நீர்நிலை, காடுகள் என, பல்வேறு தலைப்புகளில் இந்த வகைப்பாடுகள் உள்ளன.
இதில் ஒரு குறிப்பிட்ட வகைப்பாடில், வேறு வகைப்பாட்டுக்கு மாற்றம் கோரி நில உரிமையாளர்கள் விண்ணப்பிக்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் பொது மக்களிடம் கருத்து கேட்கப்படும்.
இதன் பின், பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து, பரிந்துரை வழங்கும். இந்த பரிந்துரை அடிப்படையில், சி.எம்.டி.ஏ., குழும ஒப்புதலுக்குப் பின், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படும்.
இதுகுறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
இதில், அனைத்து நிலைகளிலும் உத்தரவிடும் அதிகாரம், அரசாணை வாயிலாக உறுப்பினர் செயலருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது உள்ள உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இந்த அதிகாரத்தை பயன்படுத்த தற்போது தயங்குவதாக கூறப்படுகிறது.
இதனால், முன்பு எப்போதும் இல்லாத வகையில், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான கருத்து கேட்பு அறிவிப்பு, மூத்த திட்ட அதிகாரி பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது.
உறுப்பினர் செயலர் பெயரில் வரவேண்டிய இந்த அறிவிப்பு, மூத்த திட்ட அதிகாரி பெயரில் வெளியிடப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்ந்தால், தொழில்நுட்ப கமிட்டி கூட்டத்தை மூத்த திட்ட அதிகாரி நடத்தினால், பிற துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்பதில் சிக்கல் எழும்.
மேலும், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான அரசிதழ் அறிவிக்கையை மூத்த திட்ட அதிகாரி வெளியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எவ்வித அரசாணையும், குழும கூட்ட தீர்மானமும் இல்லாமல் நடக்கும் இந்த மாறுதல், சட்டப்பூர்வமானதா என்பதில் சிக்கல் எழுகிறது. இதனால், கட்டணம் செலுத்தி நில வகைப்பாடு ஆணை பெறுவோருக்கும் சட்ட சிக்கல் ஏற்படும். எனவே, தமிழக அரசு இந்த குழப்பத்தை முடித்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.