சென்னை, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த நபருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், ௪௦; தினக்கூலி. இவர், ௨௦௨௧ ஜூலை ௫ல், அப்பகுதியில் செயல்படாமல் இருந்த பாழடைந்த கட்டடத்தினுள்.
மனநலம் பாதித்த பெண் ஒருவரை அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
பெண்ணின் சத்தம் கேட்ட அப்பகுதியை சேர்ந்த நபர், சீனிவாசனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார், அப்போது, கொரோனா தடுப்பு பணியில் இருந்த தன்னார்வலர், அந்த பெண்ணை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
மீட்கப்பட்ட ௪௫ வயது பெண் திருமணமானவர்; மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து தப்பி வந்த அவரை, சீனிவாசன் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தது விசாரணையில் தெரியவந்தது.
திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீனிவாசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.
வழக்கில் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.