தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி இட விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், கட்டடம் கட்டுவதற்கான நிதி, வரைபடம் தயார் நிலையில் உள்ளது.
அனுமதி கிடைத்தவுடன் பணி துவங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
புறநகரில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன் உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகளை உடையது.
தவிப்பு
மாநகராட்சிக்கான கட்டடம் இல்லாததால், தாம்பரம் நகராட்சி செயல்பட்டு வந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
அங்கு, பல்வேறு பணிகளுக்காக வரும் மக்கள், அதிகாரிகளை சந்திக்கவோ, ஓய்வெடுக்கவோ, இயற்கை உபாதைகளை கழிக்கவோ வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.
அதனால், பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைவிரிப்பு
முதலில், தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவமனை-யை ஒட்டியுள்ள, மாநில சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.
பின், அந்த இடத்தில் மாவட்ட மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளதால், இடம் வழங்க சுகாதாரத் துறை கைவிரித்து விட்டது.
இதையடுத்து, மாற்று இடம் தேர்வு தொடர்பாக ஆலோசித்து, காசநோய் மருத்துவமனை வளாகத்தில், வெளி நோயாளிகள் பிரிவு இயங்கிய இடத்தில், நான்கரை ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இது தொடர்பான கோப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
எதிர்பார்ப்பு
அந்த இடத்திற்கு, 46 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாநகராட்சி கட்டடம் என்பதால், கட்டணம் இன்றி நிலம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக 10 கோடி ரூபாய் நிதி மற்றும் இரண்டு மாடிக்கான வரைபடம் தயார் நிலையில் உள்ளது.
அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், 'டெண்டர்' கோரப்பட்டு, மாநகராட்சிக்கான கட்டடம் கட்டும் பணி துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.