அன்னுார்:வடக்கலுார் செல்லும் சாலை பல இடங்களில் சேதம் ஆகி உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அன்னுாரில் இருந்து வடக்கலுார் செல்லும் பாதையில் பல இடங்களில் சாலை சேதமாகி உள்ளது. அன்னுார், ஓதிமலை சாலையில், ராம் நகர், செல்லனுர், அண்ணா நகர், வடக்கலுார் ஆகிய கிராமங்கள் உள்ளன.
வடக்கலுாரில், பொதுத்துறை வங்கி, கூட்டுறவு வங்கி, நடுநிலைப்பள்ளி, ரேஷன் கடை ஆகியவை உள்ளன. அன்னுாரிலிருந்து வடக்கலுார் வரை உள்ள நான்கு கி.மீ., துார ரோட்டில் எட்டு இடங்களில் ஆறடிக்கு ஆறடி அளவுக்கு சாலை சேதம் அடைந்துள்ளது.
குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் அந்த இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன. அங்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் சாலை சேதமான இடங்களில் விபத்துக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து வடக்கலுார் மக்கள் கூறுகையில், 'இந்தப் பாதையில் தெரு விளக்குகள் இல்லை, இரவில் வேகமாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சேதமான சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவில் சாலையில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும்,' என்றனர்.